தினுசு தினுசாக நடக்கும் திருட்டு.. "சில்லரை"ப் பயல்களிடம் தேவை கவனம்..!

0 4295

கரூரில் கடைக்காரர்களிடம் சில்லரை கேட்பது போல் நடித்து நூதன முறையில் பணத்தைத் திருடிச் செல்லும் கும்பல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இரு சக்கர வாகனங்களில் 10 பேர் கொண்ட கும்பலாக வந்து கடை வாரியாகப் பிரிந்து சென்று ஒரே பாணியில் திருட்டில் ஈடுபட்ட மோசடி கும்பல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

கரூர் சின்னாண்டான் கோவில் சாலையில் கட்டுமான பணிகளுக்கு தேவையான டைல்ஸ், கிரானைட், மரக் கட்டைகள் விற்பனை செய்யும் கடைகள் அதிகம். வந்தனா மார்பிள்ஸ் என்ற கடைக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாலை 5 மணியளவில் சில்லரை கேட்டு ஒரு பெண் உட்பட 3 பேர் கும்பல் வந்துள்ளனர். தொழிலாளர்களுக்கு சம்பளம் பிரிக்க வேண்டும் எனக் கூறியதை நம்பி அவர்களிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகள் 5ஐ பெற்றுக் கொண்டு 500 ரூபாய் 20 நோட்டுக்களை ஊழியர் வழங்கியுள்ளார். அதை பெற்றுக் கொண்ட திருட்டுக் கும்பலைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், பணத்தை எண்ணி பார்ப்பது போல் பார்த்து விட்டு, கடை ஊழியரின் கவனம் சிதறிய ஒரு விநாடியில் அதில் 10 நோட்டுகளை எடுத்து பின்னால் மறைத்துக் கொள்கிறான். மீதமுள்ள 500 ரூயாய் நோட்டுகளை கடைக்காரரிடம் திருப்பிக் கொடுத்து 100 ரூபாய் நோட்டுகளாக வேண்டும் எனக் கேட்கிறான். 

அவன் திருப்பிக் கொடுத்த 500 ரூபாய் நோட்டுக்களை எண்ணிப் பார்க்காமல் கல்லாவில் போடும் கடைக்காரர், 100 ரூபாய் நோட்டுகளை தேடிப் பார்த்துவிட்டு, போதிய அளவு இல்லை என்று கூறி, அவன் கொடுத்த 5 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அப்படியே திருப்பிக் கொடுக்கிறார். இப்போது 2வது திருடன் அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து 500 ரூபாய் நோட்டுகளை வாங்கி, அதே பாணியில் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டு அவனும் 100 ரூபாய் தாள்களைக் கேட்கிறான். இந்த முறையும் பணத்தை வாங்கி எண்ணிப் பார்க்காமல் கல்லாவில் போடும் கடைக்காரர், கோபத்துடன் அவர்கள் கொடுத்த 5 இரண்டாயிரம் ரூபாய் தாள்களை திருப்பிக் கொடுக்கிறார். 

அன்றைய தினம் இரவு கல்லாவில் பணத்தை எண்ணிப் பார்த்த கடைக்காரர் அதில் 10 ஆயிரம் ரூபாய் குறைவதைப் பார்த்து, குழம்பிப் போய் சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோதுதான், இந்தக் கண்கட்டி வித்தை திருட்டு நாடகம் அவருக்குத் தெரியவருகிறது. விவகாரம் மற்ற கடைக்காரர்களுக்கும் பரவிய நிலையில்தான் அந்த கும்பல் இதே பாணியில் மற்ற கடைகளுக்கும் சென்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

அந்தப் பகுதியிலுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆராய்ந்தபோது திருட்டுக் கும்பல் 3 இரு சக்கர வாகனங்களில் ஆண்கள், பெண்கள் என 10 பேராக வந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments