பழனி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வயலில் கருகிய நிலையில் மீட்பு… கொலையா? தற்கொலையா? என போலீசார் தீவிர விசாரணை

0 4258

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சோளக் காட்டுக்குள் தீயில் கருகிய நிலையில், சடலமாக மீட்கபட்டுள்ள சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கொலை வழக்குப் பதிந்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான சின்னராசு - வளர்மதி தம்பதிக்கு 21 வயதில் சிவரஞ்சனி என்கிற மகளும், 18 வயதில் கார்த்திகேயன் என்ற மகனும் இருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் சின்னராசுவின் சோளக் காட்டில் தீப்பிடித்து எரிவதாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் அங்கு வந்துள்ளனர்.

தீயை அணைக்க முயன்ற போது, வயலில் இறந்த நிலையில் நான்கு பேரின் உடல்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு துறையினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது சின்னராசுவின் குடும்பத்தினர் என்பது தெரியவந்தது. வெள்ளிக்கிழமை வேலாயுதம்பாளையம் புதூரில் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் வீடு திரும்பிய சின்னராசு குடும்பத்தினர் வயல்காட்டில் சடலமாக மீட்கப்பட்டது எப்படி என போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

இதனிடையே, சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன், தென் மண்டல ஐ.ஜி. அன்பு, எஸ்.பி. சீனிவாசன் உள்ளிட்டோர் சோதனை நடத்தினர். சின்னராசு குடும்பத்தினருக்கு கடன் பிரச்சனை ஏதும் இல்லை எனக் கூறும் போலீசார், இந்த சம்பவம் கொலையாக இருக்கும் என சந்தேகிக்கின்றனர். அத்தோடு, முதற்கட்டமாக சந்தேகத்தின் அடிப்படையில் கொலை வழக்கு என பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments