ரயிலில் வந்த ''பாம்பே-ஓ'' வகை ரத்தம்: கர்ப்பிணி காப்பாற்றப்பட்ட பின்னணி.!

0 2837
ரயிலில் வந்த ''பாம்பே-ஓ'' வகை ரத்தம்: கர்ப்பிணி காப்பாற்றப்பட்ட பின்னணி.!

சென்னை மருத்துவமனையில் ரத்தக் குறைபாட்டால் அவதியுற்ற கர்ப்பிணிக்கு பெங்களூருவில் இருந்து கொண்டுவரப்பட்டு ரத்தம் செலுத்தப்பட்டது. அரியவகை 'பாம்பே-ஓ' ரத்தம் கிடைப்பதில் உள்ள சிரமம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 29 வயதான பெண் ஒருவர், மூன்றாவது முறையாக கர்ப்பமான நிலையில், பிரசவத்துக்காக சென்னை எழும்பூர் தாய் - சேய் நல மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மகப்பேறு மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்த போது பாம்பே-ஓ நெகட்டிவ் என்ற மிகவும் அரிய வகையான ரத்தப் பிரிவு கொண்டவர் என தெரிய வந்தது.

மகப்பேறு காலத்தில் ரத்தப் போக்கு இயல்பாகவே இருக்கும் என்ற நிலையில் இருந்த அந்தப் பெண்ணுக்கு, பாம்பே O இரத்தம் தேவைப்பட்டது. அதற்காக இந்த அரிய வகை ரத்தம் உடையவர்களைத் தேடிய போது, சென்னையில் 2பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

அதில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாலும், மற்றொருவர் சில வாரத்திற்கு முன் குருதிதானம் செய்திருந்ததாலும் இருவராலும் ரத்தம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான ரத்தத்தைப் பெற, பெங்களூரூவைச் சேர்ந்த ஆதித்யா என்பவரின் உதவியை மருத்துவர்கள் நாடினர். குருதிக் கொடையாளியான ஆதித்யா, அப்பெண்ணுக்கு ரத்ததானம் வழங்க முன்வந்தார்.

இருப்பினும், பெங்களூரில் இருந்து நேரில் வரமுடியாத நிலையை, மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார் ஆதித்யா. பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையைத் தொடர்பு கொண்ட எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனை நிர்வாகம், ஆதித்யாவின் ரத்தத்தை முறைப்படி பெற கேட்டுக் கொண்டது.

அதன்படி கடந்த 14 ம் தேதி பெங்களூருவில் பெறப்பட்ட பாம்பே O வகை இரத்தம் பதப்படுத்தப்பட்டு, அடுத்த சில மணி நேரங்களில் விரைவுரயில் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்தது. பிரசவத்தில் தவித்த அப்பெண்ணின் உடலில் உரிய நேரத்தில் ரத்தத்தை செலுத்தியதால், ஆண் குழந்தையை பெற்றெடுத்த தாயும், சேயும் தற்போது நலமாக உள்ளனர். அந்தப் பெண்ணுக்கு 2வது பிரசவத்தின் போதும், இதே கொடையாளிதான் சென்னைக்கு வந்து ரத்தம் கொடுத்துச் சென்றுள்ளார்.

ஓ பிரிவு ரத்தம் உடையவர்கள், தங்கள் ரத்தம் பாம்பே ஓ பிரிவாகக் கூட இருக்கலாம் என்பதை பரிசோதனை மூலம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்துகிறார் ரத்த வங்கி மருத்துவர் ஜெயந்தி. ஆபத்தான காலத்தில், ரத்த வகையை மாற்றி உடலில் செலுத்தப்பட்டால், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

பாம்பே O பிரிவு ரத்தமானது, 10 ஆயிரம் பேரில், ஒருவருக்கு மட்டுமே இருக்கும் மிகவும் அரிய வகையாகும். வட மாநிலங்களில் இந்தவகை ரத்தம் உடையவர்கள் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 1952ம் ஆண்டு பாம்பேயில் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இது பாம்பே ஓ பிரிவு என பெயரிடப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments