விருந்து வைக்க சென்ற மேனேஜருக்கு ரவுண்டு கட்டி விருந்து..! பாவம் வெல்கம் கேர்ள்ஸ்..!

0 7817
விருந்து வைக்க சென்ற மேனேஜருக்கு ரவுண்டு கட்டி விருந்து..! பாவம் வெல்கம் கேர்ள்ஸ்..!

திருமண நிகழ்ச்சிகளில் வெல்கம் கேர்ள்ஸ் வேலைக்கு செல்லும் இளம் பெண்களை பணத்தாசை காண்பித்து பாலியல் தொழிலுக்கு அழைத்த ஈவெண்ட் மேனேஜரை, அந்த பெண்ணின் உறவினர்கள் ஏமாற்றி அழைத்துச்சென்று அடித்து உதைத்து நகை பணம் பறித்த சம்பவம் அரங்கேறி உள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சென்னை போர்ட் கலக்கல் பாய்ஸ் என்ற பெயரில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி மற்றும் கச்சேரி ஈவெண்ட் மேனெஜராக இருப்பவர் ராஜா. இவர் திருமணங்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு வெல்கம் கேர்ள்ஸ் என வரவேற்பு பெண்களை கூட்டிச்செல்வதையும் செய்து வருகிறார். இவர் தன்னிடம் வெல்கம் கேர்ள்ஸ் வேலைக்கு வரும் அழகான பெண்களுக்கு பணத்தாசை காட்டி பாலியல் தொழிலுக்கு அழைப்பதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

ராஜாவின் இந்த அழைப்பு குறித்து 18 வயது இளம்பெண் ஒருவர், தன்னுடன் பணிக்கு வரும் 28 வயது பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அவர் இதனை வைத்து ராஜாவை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். நடந்த சம்பவம் குறித்து தங்கள் உறவுக்கார இளைஞர்களிடம் தெரிவித்துள்ளனர். அந்த இளைஞர் கும்பலை சேர்ந்த ஒருவர், தன்னை பிரபல அரசியல் பிரமுகரின் உறவினர் எனக்கூறி ராஜாவை தொடர்பு கொண்டு , தனது தோட்டத்தில் வைக்கின்ற விருந்து நிகழ்ச்சிக்கு 20 பெண்கள் வேண்டும் என்று செல்போனில் பேசி ஏமாற்றி வரவழைத்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 22 ந்தேதி வெல்கம் கேர்ள்ஸ் பணிக்கு வந்த 3 பெண்களை அழைத்துக் கொண்டு தேவக்கோட்டை ரஸ்தா அருகே விருந்து நடக்க இருப்பதாக கூறப்பட்ட தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார். வழியில் ராஜாவையும் , அந்த 3 பெண்களையும் காரில் அழைத்துச்சென்ற அந்த இளைஞர் கும்பல், அங்குள்ள செங்கல் சூளை ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர்.

ராஜாவின் ஆடைகளை களைந்து அடித்து உதைத்ததாகவும், ராஜாவின் குரல்பதிவை காட்டி, அவர் கூட்டிச்சென்ற பெண்களையும் அடித்து மிரட்டியதோடு, அவர்களை வைத்தே ராஜாவை அடிக்க வைத்து வீடியோ எடுத்து வைத்துக்கொண்டதாகவும், ராஜாவிடம் இருந்து பணம் மற்றும் நகையை பறித்துக் கொண்டு, இதனை வெளியில் சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி விரட்டியதாக கூறப்படுகின்றது.

ஆரம்பத்தில் அவமானத்திற்கு பயந்து எந்த ஒரு காவல் நிலையத்திலும் புகார் அளிக்காத ராஜா, சாக்கோட்டை போலீஸ் நிலைய எழுத்தராக பணிபுரியும் மாயவதனிடம் தனக்கு நேர்ந்த அவமானத்தை தெரிவித்துள்ளார். இதனை கமுக்கமாக முடிக்கும் நோக்கில் மாயவதன், சம்பந்தப்பட்ட இளைஞர்கும்பல் மற்றும் இரு பெண்களிடமும் பேசி ராஜாவிடம் பறித்த நகை பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

இதையடுத்து அந்த இளைஞர்களின் தூண்டுதலின் பேரில் ராஜாவால் பாதிக்கப்பட்டதாக கூறி இரு பெண்களும், முதல் அமைச்சரின் தனிப்பிரிவு, மாநில மகளிர் ஆணையம், தமிழக டிஜிபி அலுவலகம், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியதாக கூறப்படுகின்றது. புகார் மனுவில், ஈவெண்ட் மேனேஜ் மெண்ட் என்ற பெயரில் அப்பாவி குடும்ப பெண்களை பாலியல் தொழிலில் தள்ளி பணம் சம்பாதித்து வரும் ராஜா மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி இருந்தனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ராஜாவின் வழக்கறிஞர், கடத்தல் வழிப்பறி சம்பவத்தை மறைப்பதற்காக ராஜா மீது உள் நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதே நேரத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள காரைக்குடி டி.எஸ்.பி வினோஜி, இந்த புகார் தொடர்பாக இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் பணம் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை விசாரணைக்கு பலமுறை அழைத்தும் அவர்கள் ஆஜராகாததால், தற்போது சம்மன் அனுப்பபட்டுள்ளதாக தெரிவித்தார். அதே போல ராஜா மீது புகார் அளித்த பெண்களில் ஒருவர் 18 வயது பெண் என்பதால் இந்த வழக்கை மிகுந்த கவனமுடன் விசாரிப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments