வறுமை ஒழிப்பு என்ற பெயரில் பாயும் சீன அதிபர்.! கேள்விக்குறியாகும்., செல்வந்தர்கள், தொழிலதிபர்களின் நிலை.!

0 4133

சீன அதிபரின் புதிய அறிவிப்பு ஒன்று, அந்நாட்டின் செல்வந்தர்களை ஆற்றாமையில் ஆழ்த்தியிருப்பதோடு, சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. வளர்ச்சி, வறுமை ஒழிப்பு என்ற பெயரில், வழித்தேங்காயை எடுத்து உடைப்பதுபோன்ற, சீன அதிபரின் செய்கையால், தாங்கள் திட்டமிட்டு, உழைத்து சேர்த்த செல்வங்கள் பறிபோய்விடுமோ என்ற கவலையில் செல்வந்தர்கள் ஆழ்ந்திருக்கின்றனர். 

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனாவில், கடந்த 2012ஆம் ஆண்டு, ஜி ஜின்பிங், அதிபராக பொறுப்பேற்றது முதல், வளர்ச்சி என்ற பெயரிலும், வறுமை ஒழிப்பு என்ற தலைப்பிலும், பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். சீனாவை கம்யூனிச தேசமாக மாற்றிய மா-சே-துங் போன்று, தன்னை நவீன மா சே.வாக முன்னிறுத்த அதிபர் ஜி ஜின்பிங் முயற்சிக்கிறார் என்பது, சர்வதேச விவகாரங்களை கவனிக்கும் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின், தேசிய நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமையேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங், "அனைவருக்கும் பொதுவான செல்வச்செழிப்பு" என்ற தலைப்பில், அனைத்து தரப்பினரையும் அதிர வைக்கும், அதிரிபுதிரியான திட்டத்தை, வறுமை ஒழிப்பு என்ற பெயரில் அறிவித்திருக்கிறார்.

அதாவது, பொருளாதார ஸ்திரத்தன்மை, வறுமை ஒழிப்பு என்ற பெயரில், வழித்தேங்காயை எடுத்து உடைப்பதுபோல், சீனாவில் உள்ள செல்வந்தர்கள், தொழிலதிபர்கள், தங்களது மிதமிஞ்சிய வருமானத்தை, மீண்டும் சமுதாயத்திற்கு திருப்பி விடுமாறு அறிவித்திருக்கிறார்.

உலகமயமாக்கலால் ஏற்பட்டிருக்கும் வணிகப் போட்டிச்சூழல், கொரோனாவால் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை கடந்து, தொழில் செய்வதும், ஒரு நிறுவனத்தை நடத்துவது என்பதும், இக்காலகட்டத்தில் குதிரை கொம்பாக உள்ளது.

இந்த சூழலில், செல்வந்தர்களின் மிதமிஞ்சிய வருமானத்தை தடுத்து, சமுதாயம் என்ற பெயரில் அரசு கஜானாவிற்கு மடைமாற்றுவதாக் கூறிக் கொண்டு, சீன அதிபர் அறிவித்திருக்கும் திட்டம், சீன தொழிலதிபர்கள், செல்வந்தர்களை பதற்றத்தில் ஆழ்த்தும் எனக் கூறப்படுகின்றது.

சீனாவில் பணக்காரர்கள் ஏழைகளை விட, 2000 சதவிகிதம் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்ற 2015ஆம் ஆண்டு கணிப்பை சுட்டிக்காட்டி, அது தற்போது வரையில் மாற்றமின்றி தொடர்வதாகவும், இதன் காரணமாகவே, மிதமிஞ்சிய வருமானத்தை திருப்பி விடும் திட்டத்தை முன்னெடுப்பதாகவும், சீன அதிபர் அறிவித்திருப்பது, அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பொருளாதார ஒழுங்குமுறை என்ற பெயரில், சீன அதிபர் அறிவித்திருக்கும், "அனைவருக்கும் பொதுவான செல்வச்செழிப்பு" என்ற திட்டத்தால், பில்லியன்களில் பங்கு முக மதிப்பை இழந்திருக்கும் நிறுவனங்களை, திட்டம் அமலானால், என்ன நடக்கும் என்றே யூகிக்க முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகலாம் என்றும் அபாய மணி ஒலிக்காமல் இல்லை.

கடந்த வாரத்தில், சீன ஊடகங்கள், அதிபரின் புதிய திட்டம் தொடர்பாக ஒளிபரப்பிய செய்திகளை பார்த்து அச்சத்தில் ஆழ்ந்த முதலீட்டாளர்கள், தங்கள் பணத்தை, இ-சிகரெட் உள்ளிட்ட வேப்பிங் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், இராசயன ஆலைகள், மது ஆலைகளில், அவசர, அவசரமாக முதலீடு செய்துள்ளனர்.

ஏற்கனவே, அலிபாபா நிறுவன அதிபர் ஜாக் மா கூறிய ஆலோசனைகளை, அரசுக்கு எதிரான கருத்தாக சீன அதிபர் மடைமாற்றியதால், கலக்கத்தில் ஆழ்ந்த சீன தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், தற்போது, "அனைவருக்கும் பொதுவான செல்வச்செழிப்பு" என்ற பெயரில், ஜி ஜின்பிங் அறிவித்திருக்கும் திட்டத்தால், பல நெருக்கடிகளுக்கு மத்தியில் சிறுக, சிறுக சேர்த்த செல்வங்கள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்திருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments