ரோபோடிக்… கேமிங்.. ஜப்பானிய கைதொழில்.. அசத்தும் அரசு ஆசிரியர்..! இவர பாலோ பண்ணுங்கப்பா..!

0 2728
இணையத்திலும் கணினி செயல்பாடுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறார்.

இணையத்திலும் கணினி செயல்பாடுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறார். 4ஜி இணைய வேகம் இல்லாத மாணவர்களுக்கும் பாடங்களை எளிதாகக் கொண்டு செல்ல தனியாக ஒரு பண்பலை செயலியையும் உருவாக்கியுள்ள ஆசிரியரின் தன்னலமற்ற பணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் காளிதாஸ். கணினி மற்றும் ஸ்மார்ட் போன் செயல்பாடுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆசிரியர் காளிதாஸ், வளரும் தலைமுறை அதன் மூலம் பயனடைய வேண்டும் என எண்ணியுள்ளார். அதன் தொடர்ச்சியாக தான் பணிபுரியும் பள்ளியில் தனது சொந்த செலவில் “இண்ட்டராக்டிவ் போர்டு” (Interactive Board) என்ற அதிநவீன காணொளி பலகையை அறிமுகப்படுத்தி, அதில் இணையவழி பாடத்தை நடத்தி பலரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.

ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதும் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில், “ஸ்பாட்டிஃபை” (Spotify) என்ற செயலி மூலம் தனக்குத் தெரிந்த 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, முதலில் இணையவழி கற்பித்தலில் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார் காளிதாஸ். அவர்களைக் கொண்டு “இன்னோவேட்டிவ் டீச்சர்ஸ் டீம்” என்ற இணையப் பக்கத்தைத் தொடங்கி, அதன் மூலம் தனது பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தினசரி வகுப்புகளை எடுத்து வருகிறார் காளிதாஸ்.

4ஜி இணைய வேகம் கிடைக்காத மாணவர்களுக்காக 2 ஜி இணைய வேகத்திலும் இயங்கும்படியான எஃப்.எம். செயலியை உருவாக்கி, அதன் மூலமும் திருக்குறள், பழமொழி, விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல் உட்பட பல்வேறு விஷயங்களை மாணவர்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் காளிதாஸ். செல்போனில் மாணவர்களே விளையாட்டை வடிவமைப்பது குறித்தும் பயிற்சி அளிக்கிறார்.

சினிமாவில் மட்டுமே பார்த்த ரோபோட்டிக் தொழில்நுட்பம் குறித்தும், ஜப்பானின் “ஓரிகாமி” எனப்படும் காகித மடிப்புக் கலை உள்ளிட்டவற்றையும் ஆன்லைனில் கற்பிக்கும் ஆசிரியர் காளிதாஸ், மூளைக்கு வேலை கொடுக்கும் சில ஆண்ட்ராய்ட் செயலிகளையும் உருவாக்கி, அதனை மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பித்து அசத்தி வருகிறார்.

சமூக வலைதலங்கள் மூலமாகவும் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்து வரும் காளிதாஸ், இதற்காக தனியாக கட்டணம் எதையும் வசூலிப்பது இல்லை என்பதுதான் கவனிக்கத்தக்க விஷயம். காளிதாஸின் கல்விச் சேவையைப் பாராட்டி அப்போதைய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் விருதும் வழங்கியுள்ளார். பல தனியார் அமைப்புகளும் காளிதாசுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளன. 

மாணவர்களின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டு அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் ஆசிரியர் காளிதாசின் செயல்பாடு, பல்வேறு தரப்பினரின் வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் பெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments