சட்டப்பேரவை நடைபெற்று வரும் கலைவாணர் அரங்க வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா

0 3721

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி பெயரை சேர்க்க சதி நடைபெறுவதாக கூறி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பின்னர் வெளியே தர்ணா போராட்டம் நடத்தினர். கொடநாடு வழக்கில் குற்றவாளிகளான சயன், வாளையார்  ரவி, மனோஜ் போன்றோருக்கு ஆதரவாக திமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானது ஏன் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

காலையில் சட்டப்பேரவை கூடியதும் எழுந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முடிவடையும் நிலையில் உள்ள கொடநாடு கொலை வழக்கை மறு விசாரணை செய்வது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக்கூறி பேச ஆரம்பித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி தரவில்லை.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச எழுந்த போது, எதிர்கட்சி எம்எல்ஏக்களுக்கு பேச அனுமதி தராதது ஏன் என்று கூறி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறி அதிமுக எம்எல்ஏக்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். தொடர்ந்து கலைவாணர் அரங்கிற்கு வெளியே வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அங்கு ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் திமுக அரசு பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தர்ணா போராட்டத்தை தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திமுக அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்குவதில் கவனம் செலுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திமுக அரசு மறு விசாரணை செய்வது பழிவாங்கும் நடவடிக்கை என்றார். மேலும் கொடநாடு வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள சயனிடம் பெற்ற ரகசிய வாக்குமூலத்தில் தனது பெயரையும், அதிமுக நிர்வாகிகள் சிலர் பெயர்களையும சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

கொடநாடு கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு திமுகவினர் ஜாமீன்தாரர்களாக இருந்ததாக எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும் கொடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்காக திமுக வழக்கறிஞரான என்.ஆர்.இளங்கோ ஆஜரானதாகவும் அவர் தெரிவித்தார். அதிமுக ஆட்சியின் போது கொடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆஜரான வழக்கறிஞர்கள், தற்போது அரசு வழக்கறிஞர்களாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார். கொடநாடு வழக்கில் குற்றவாளிகளும், அரசு வழக்கறிஞர்களும் இணைந்து செயல்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும், கொலை, கொள்ளை, போதை மருந்து வழக்குகளில் தொடர்புள்ள அவர்களுக்கு திமுக அரசு ஆதரவு கொடுப்பது ஏன்? என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

திமுக அரசு பழிவாங்கும் வகையில் செயல்படுவதாகவும் இதனை கண்டித்து சட்டப்பேரவையை இரண்டு நாட்களுக்கு புறக்கணிக்க உள்ளதாகவும் அதிமுக அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments