ஆம்புலன்ஸ் அலப்பறை.. வெற்றிக் கோப்பையுடன் சைரன் ஒலிக்க ஊர்வலம்..!

0 3375

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உயிர்காக்கும் ஊர்தியான ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது கிரிக்கெட் கோப்பையை வைத்து சைரனை ஒலிக்க விட்டு வெற்றி ஊர்வலம் நடத்திய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நெல்லை மேலப்பாளையத்தில் தனியார் டிரஸ்ட் சார்பில் சுதந்திரதினத்தையொட்டி நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினர் தங்களது வெற்றி கொண்டாட்டத்தை மிகவும் வித்தியாசமாக முறையில் கொண்டாட முடிவு செய்தனர்.

அதன்படி மேலப்பாளையத்தை சேர்ந்த அந்த கிரிக்கெட் குழுவினரின் நண்பர்கள் வைத்திருக்கும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை வரவழைத்து ,அதில் ஒரு ஆம்புலன்ஸின் கூரையில் வெற்றி கோப்பையை வைத்து, வெற்றி பெற்ற அணி வீரர்கள் ஆம்புலன்ஸில் தொங்கியபடி வர மற்றவர்கள் பின் தொடர , அவசர கால சைரன் ஒலிக்க மைதானத்தை வலம் வந்து அலப்பறை செய்தனர்.

இந்த காட்சியை எடுத்து அவர்களே சமூக வலைதளங்களில் பரப்பியதால் சிக்கலில் மாட்டிக் கொண்டனர். உயிரை காக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்தை விளையாட்டு பொருள் போல மாற்றி வெற்றி கோப்பையுடன் அதில் தொற்றிக் கொண்டு செல்லும் வாகனமாக மாறிவிட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் காவல்துறையினர் அந்த 4 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments