ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க புதிய இ-விசா முறை அறிமுகம்

0 2002

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை அமெரிக்க ஒத்துழைப்புடன் பயணிகள் விமானம் மூலம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினருக்கு முன்னுரிமை அளித்து, ஆப்கானிஸ்தானில் இருந்து வருபவர்களுக்காக புதிய இ-விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நிலவரைத்தை தொடர்ந்து, நியூயார்க் சென்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம் பேசி, ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்டு அழைத்து வருவதற்கு அமெரிக்காவின் ஆதரவை கேட்டுள்ளார். பயணிகள் விமானங்கள் மூலமே இந்தியர்கள் அனைவரையும் மீட்டு வருவதற்கு முழுஆதரவு வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அப்போது உறுதியளித்துள்ளார். 

அமெரிக்கர்களுடன் இணைந்து, பயணிகள் விமானங்கள் சென்றுவருவதற்கு ஏதுவான நிலையை உருவாக்குவதற்கான பணிகளில் தற்போது வெளியுறவு அமைச்சர் ஈடுபட்டுள்ளார். உரிய ஏற்பாடுகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் பயணிகள் விமானத்தின் மூலம் அழைத்து வரப்பட உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் இந்தியர்கள், எச்சரிக்கைகளையும் மீறி ஆப்கானிஸ்தான் சென்ற இந்தியர்கள், அமெரிக்க, ஐரோப்பிய ஒப்பந்ததாரர்களின் கீழ் பணிபுரியும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், நமது நாட்டுடன் பாரம்பரியமாக தொடர்புடைய ஆப்கானியர்கள் அழைத்து வருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், பயண ஆவணங்கள் இல்லை என்றாலும் விண்ணப்பிப்பவர்களுக்கு இ-விசா வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக அவசரகால இ-விசா என்ற புதிய விசா வகை உருவாக்கப்பட்டு விரைவான முறையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்புபவர்களுக்கும், ஆப்கானிஸ்தானில் வாழும் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments