பாஸ்ட் டேக் மூலம் பாஸ்ட்டா கொள்ளை வாகன ஓட்டி ஆவேசம்..! எல் அண்ட் டி சுங்கசாவடி மோசடி..!

0 4215

கோயம்புத்தூர் பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள மதுக்கரை எல் அண்ட் டி சுங்கச்சாவடியில் ஒரு முறை செல்லும் வாகனத்திற்கு 3 முறைக்கும் மேலாக பணம் எடுக்கப்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாகன ஓட்டியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சுங்கச்சாவடி மேலாளர் தவித்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

கோயம்புத்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் மதுக்கரையில் எல்.அண்ட் டி நிறுவனத்தின் சுங்கச் சாவடி ஒன்று உள்ளது. இந்த வழியாகச் செல்லும் வாகனங்களில் பாஸ்டேக் மூலம் ஒரு முறைக்கும் அதிகமாக பணம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

அந்தவகையில் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி ஒருவர், ஞாயிற்றுக்கிழமை சுங்கச்சாவடி மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்த சுங்கச்சாவடியில் 2 அல்லது மூன்று முறை என்ட்ரி விழுவதால் தன்னிடம் இருந்து மட்டும் 2,000 ரூபாய்க்கு மேல் சுங்கச்சாவடி நிர்வாகம் அதிகமாக வசூலித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

பாஸ்டேக்கில் இருமுறை பணம் எடுத்தது குறித்து கேட்டால், தொழில் நுட்பக் கோளாறு என்றுகூறி சுங்கச்சாவடி ஊழியர் கையில் பணத்தை எடுத்து நீட்டுவதாகவும், கேள்வி கேட்காமல் செல்லும் வாகன ஓட்டிகளின் பணம் எங்கே செல்கிறது, இதற்கு உடந்தையாக இருப்பது யார் என்று கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.

கார் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் வசூலிப்பதாகவும், பாஸ்டேக் மூலம் தொடர்ந்து பணம் எடுக்கப்பட்டாலும்
பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் அலைச்சல் கருதி கண்டு கொள்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டிய அவர், இதற்கு விசாரணைக் கமிஷன் வைக்க வேண்டுமென ஆவேசமாகத் தெரிவித்தபோது பதில் சொல்ல இயலாமல் தவித்துக் கொண்டிருந்தார் சுங்கச்சாவடி மேலாளர்.

இந்த விவகாரம் குறித்து பதிலளித்த மதுக்கரை எல் அண்ட் டி சுங்கச்சாவடி மேலாளர், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டதால் சமாதானம் ஆகிச் சென்று விட்டார் என்று தெரிவித்தார். இந்த சோதனை சாவடியில் பாஸ்டேக் மூலம் கூடுதலாகப் பணம் எடுக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருவதால் அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தவேண்டியது அவசியம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments