ஆப்கானிஸ்தானில் பதற்றம்... தப்பியோடும் மக்கள்... இந்தியர்கள் நிலை என்ன?

0 8485

ப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து, அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை அகற்ற உலக நாடுகளுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வந்ததை அடுத்து, அரசு படைகளுடன் தீவிரமாக போரிட்டு வந்த தலிபான்கள், இறுதியாக தலைநகர் காபூலை கைப்பற்றி, முழு நாட்டையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ரத்தக்களரி ஏற்படுவைதை தவிர்க்க விரும்புவதாக கூறிய அதிபர் அஷ்ரப் கனி, காபூலில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார்.

தலிபான்கள் வசம் ஆட்சி, அதிகாரம் சென்றுள்ளதால், மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் எப்படியாவது அங்கிருந்து வெளியேறி விட வேண்டும் என்ற தவிப்பில், காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த விமானம் ஒன்றில் அவர்கள் முண்டியடித்து ஏற முயன்றனர்.

விமானத்தில் ஏற முயன்றவர்களை விரட்ட அங்கிருந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள குருத்துவாராவில் 200 சீக்கியர்கள் இருப்பதால் அவர்களை மீட்க வேண்டும் என்று பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் அமெரிக்க படையின் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்குவதற்கு தற்போது தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர்களை பாதுகாப்பாக இந்தியா கொண்டு வருவதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மீண்டும் விமானங்கள் இயங்குவதற்காக காத்திருப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கனில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் இந்தியா வர விரும்பினால் அவர்களுக்கு உதவி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காபூல் நகரில் வீடு வீடாகச்சென்று தலிபான் பயங்கரவாதிகள் சோதனை நடத்தி, பொதுமக்கள் தங்களது பாதுகாப்புக்காக வைத்துள்ள ஆயுதங்களை கைப்பற்றினர். பொதுமக்களை துன்புறுத்தும் எண்ணம் இல்லை என்றும், அரசு அதிகாரிகள் வழக்கம் போல் பணியை தொடரலாம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் புதிய அரசை கட்டமைப்பது தொடர்காக கத்தார் நாட்டின் தோகா நகரில் தலிபான்கள் ஆலோசனை நடத்தினர். ஆப்கானிஸ்தானை இனி இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்று அவர்கள் அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நிலவரம் குறித்து இந்தியா தலைமையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை நடத்தியது.

அதில், ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை தெரிவித்த ஐ.நாபொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், தலிபான்கள் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை அகற்ற அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அகதிகளை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments