மாமனார் வீட்டுக்குள் லாரியை விட்டு தற்கொலை தாக்குதல்... காதல் மனைவி பிரிவால் ஆத்திரம்.!

0 3740

சேலம் அருகே காதல் மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் அதிவேகமாக லாரியை ஓட்டிவந்து மாமனார் வீட்டின் மீது மோதி தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் ஒருவர் பலியானார்.

மனைவி குடும்பத்தை மொத்தமாக லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்றவரின் விபரீத தாக்குதல் சதி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

சேலம் சூரமங்கலம் அடுத்த சோளம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் கொரியர் நிறுவனத்தில் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று சுப்பிரமணி கொரியர் லாரியை மனைவியின் வீட்டிற்குள் கொண்டு வந்து இடித்த சம்பவத்தில் ஒருவர் பலியானார்,

தூக்கத்தால் நிகழ்ந்த விபத்து என்று நினைத்து காயம் அடைந்த சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் சூரமங்கலம் போலீசாரின் விசாரணையில் இது திட்டமிட்ட தற்கொலை தாக்குதல் சம்பவம் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

லாரி ஓட்டுனர் சுப்பிரமணி அதே ஊரை சேர்ந்த ஜீவிதா என்பவரை கடந்த 6 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் கணவன் மனைவி இடையே தினமும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு ஜீவிதா சோளம் பள்ளத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

பலமுறை ஜீவிதாவிடம் சென்று தன்னுடன் வருமாறு சுப்பிரமணி கேட்டுக் கொண்ட போதும் ஜீவிதா வர மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பும் ஜீவிதாவின் வீட்டிற்கு சென்று தன்னுடன் வருமாறு சுப்பிரமணி மீண்டும் அழைத்துள்ளார் . ஜீவிதா வரமறுத்த நிலையில் சுப்பிரமணி மாமனாரிடம் சென்று முறையிட்டுள்ளார்.

அவரும் கண்டும் காணாமல் இருந்ததாக கூறப்படுகின்றது. மனைவி தன்னிடம் இருந்து பிரிந்து செல்வதற்கு குடும்பத்தினர் கொடுக்கும் ஆதரவு தான் காரணம் என்ற கோபத்தில் தன் உயிர் போனாலும் பரவாயில்லை மனைவி குடும்பத்தினரை மொத்தமாக கொலை செய்யும் விபரீத முடிவை எடுத்துள்ளார் சுப்பிரமணி .

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் சென்று கொரியர் பாரத்தை ஏற்றிக்கொண்டு சுப்பிரமணி சேலம் சோளம் பள்ளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

மனைவி மற்றும் மாமனார் மீது உள்ள ஆத்திரத்தில் திட்டமிட்டபடி கொரியர் லாரியை அதிவேகமாக ஓட்டிச் சென்று மாமனார் வீட்டின் மீது மோதி தற்கொலை தாக்குதல் நடத்தி உள்ளார். மோதிய வேகத்தில் லாரி வீட்டின் முன்பகுதியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று நின்றது.

அந்த அதிவேக தாக்குதலில் வீட்டுக்கு வெளியில் படுத்து இருந்த உறவினர் ஜீவாஎன்கிற ஜீவானந்தம் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியான நிலையில் , வீட்டிற்குள் இருந்த மனைவி ஜீவிதா மற்றும் மாமனார் மாமியார் உள்ளிட்ட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் . இதில் லாரியை ஓட்டி தாக்குதல் நடத்திய சுப்பிரமணியமும் படுகாயம் அடைந்தார்.

ஆரம்பத்தில் இது விபத்து என்று நினைத்த அவரது உறவினர்கள் சுப்பிரமணியை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்த்தனர் .

இதையடுத்து லாரி ஓட்டுனர் சுப்பிரமணியன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் , சிகிச்சைக்கு பின்னர் அவரை கைது செய்ய சூரமங்கலம் போலீசார் முடிவு செய்துள்ளனர். விமானத்தை கடத்தி மோதுவது போல லாரியை கொண்டு மாமனார் வீட்டிற்குள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments