தங்க குண்டுமணி என நம்பி ஏமாந்த பெண்மணி.. வட மாநில கும்பல் நூதன மோசடி.!

0 12004
சென்னையில் ஒரு குண்டுமணி தங்கத்தை காண்பித்து ஏமாற்றி பெண்ணிடம் இருந்து 3 லட்சம் ரூபாயை சுருட்டிக் கொண்டு தப்பிய வடமாநில கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் ஒரு குண்டுமணி தங்கத்தை காண்பித்து ஏமாற்றி பெண்ணிடம் இருந்து 3 லட்சம் ரூபாயை சுருட்டிக் கொண்டு தப்பிய வடமாநில கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண், வீட்டுக்கு அருகேயே மாவுக் கடை நடத்தி வருகிறார். ஜெயந்தியின் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக, அடிக்கடி வந்த ஒரு பெண் உட்பட 3 பேர் கொண்ட கும்பல், மெட்ரோ ரயில்திட்டத்திற்கு சுரங்கம் தோண்டும் பணி செய்து வருவதாக கூறிக்கொண்டு அறிமுகமாகியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன் சுரங்கம் தோண்டும்போது, ஒரு குண்டுமணி அளவில் தங்கம் போன்ற பொருள் கிடைத்ததாகவும், அதனை நகைக்கடையில் கொடுத்து பரிசோதித்து தருமாறும் கூறியுள்ளனர். ஜெயந்தியும் தனக்கு தெரிந்த நகைக்கடையில் அந்த குண்டுமணியை பரிசோதித்த போது, அது 700 மில்லி கிராம் அளவுள்ள உண்மையான தங்க குண்டுமணி எனவும் அதனுடைய மதிப்பு 4 ஆயிரம் ரூபாய் எனவும் தெரியவந்தது.

சில நாட்கள் கழித்து இதேபோன்று மற்றொரு குண்டுமணி கிடைத்துள்ளதாக ஜெயந்தியை நம்ப வைத்த அந்த கும்பல், பின்னர், 50லட்சம் மதிப்புள்ள தங்க குண்டுமணிகள் கிடைத்துள்ளதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இந்த குண்டுமணிகளை வைத்துக் கொண்டு 4லட்சம் ரூபாய் பணம் தருமாறு அந்த கும்பல் கேட்கவே, 50லட்சம் கிடைக்கப் போகுது என்ற ஆசையில் மோசடி கும்பல் விரித்த வலையில் ஜெயந்தி சிக்கினார். கையில் இருந்த நகை, பணம் என மூன்று லட்சம் ரூபாயை மோசடி கும்பலிடம் கொடுத்துவிட்டு, குண்டுமணிகளை வாங்கியுள்ளார்.

வாங்கிய குண்டுமணிகளை நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது தான் அவை அனைத்துமே தங்க முலாம் பூசப்பட்ட இரும்பு குண்டு மணிகள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ஜெயந்தி போலீசாரிடம் புகாரளித்துள்ளார். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் மர்ம கும்பலின் காட்சிகள் பதிவாகியிருப்பதால் அவற்றை வைத்து மோசடி பேர்வழிகளை தேடி வரும் போலீசார், இதேபாணியில் சென்னையில் வேறெங்கும் மோசடி நடந்துள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments