நாட்டின் 75 வது சுதந்திர தினம் இன்று கொண்டாட்டம்..! செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றுகிறார் பிரதமர்

0 2638

நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த உள்ளார்.

நாட்டின் 75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். வரலாற்றில் முதன் முறையாக இந்த ஆண்டு பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும்போது இந்திய விமானப்படையின் 2 ஹெலிகாப்டர்கள் பூமழைத் தூவ உள்ளன.

மலர்கள் தூவப்பட்ட பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றுவார். அவரது உரை நிறைவடைந்தவுடன் தேசிய மாணவர் படையினர் தேசிய கீதத்தை இசைப்பார்கள். ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 32 ஒலிம்பிக் வெற்றியாளர்களும் இந்திய விளையாட்டு ஆணையத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் செங்கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், முப்படைத் தளபதிகள் உள்பட பலரும் பங்கேற்கின்றனர். அசம்பாவிதம் நிகழாமல் தடுப்பதற்காக, டிரோன்கள் எதிர்ப்பு அமைப்பு உள்ளிட்ட தடுப்பு அமைப்புகளுடன் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து இரண்டாவது முறையாக சுதந்திர தினம் குறைந்த நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது. வழக்கமான நிகழ்ச்சிகள் குறைக்கப்பட்ட போதும் சுதந்திரத்தின் பெருமையை உணர்த்த கொரோனா கால முன்னெச்சரிக்கையுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments