மேட்ரிமோனியல் மன்மதனும் அந்த 50 பொண்ணுங்களும்..! பேச்சால் எல்லாம் போச்சு..!

0 16565
மேட்ரிமோனியல் மன்மதனும் அந்த 50 பொண்ணுங்களும்..! பேச்சால் எல்லாம் போச்சு..!

மேட்ரிமோனியல் மூலம் பல பெண்களிடம் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்வதாக கூறி பல லட்சம் ரூபாய் பணத்தையும், 100 சவரன் நகைகளையும் களவாடிச் சென்ற புகாரில் உளவுப்பிரிவு எஸ்.பியின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆசைவார்த்தைக்கு அடிமையாகி அவசர புத்தியால் மோசடிப் பேர்வழியுடன் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்குவது  வரை சென்ற பெண்களுக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணத்திற்காக வரன் தேடி மேட்ரிமோனியல் இணையதளம் ஒன்றில் பணம் கட்டி தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். அதன் மூலமாக தொடர்பு எண்ணை பெற்ற பெங்களூரை சேர்ந்த 25 வயதான சூர்யா என்பவர் தன்னை என்ஜீனியர் என அறிமுகம் செய்து கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி தனியாக வந்து பெண் பார்த்து சென்றுள்ளார், பின்னர் அந்த பெண்ணுடன் செல்போனில் பேசி பழகியுள்ளார்.

ஒரு கட்டத்தில் செல்போனில் அந்தப்பெண்ணிடம் ஆசையை தூண்டும் விதமாக பேசி, அந்தப்பெண்ணுக்கு நம்பக தன்மை ஏற்படும் வகையில் நடந்துள்ளான். ஒரு நாள் டேட்டிங் செல்லலாம் என்று அழைத்துச்சென்று அந்த பெண்ணுடன் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளான். அங்கு வைத்து அந்தப்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த சூர்யா, அதனை வீடியோ பதிவும் செய்ததாக கூறப்படுகின்றது.

பின்னர் பெண் வீட்டார், இடம் வாங்க வைத்திருந்த 7 லட்சம் ரூபாய் பணத்தை அபகரிக்க திட்டமிட்டு, அந்த பெண்ணின் குடும்பத்தாரை இடம் வாங்க அழைத்து செல்வது போல் காரில் கூட்டிச் சென்று கவனத்தை திசைதிருப்பி அவர்களிடம் இருந்து பணத்தை களவாடிக் கொண்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகியுள்ளான் சூர்யா. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் கானத்தூர் ஆய்வாளர் வேலு, தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

செல்போனில் பயன்பாட்டில் இருக்கும் சிம்கார்டின் சிக்னலை வைத்து சூர்யா கோவையில் பதுங்கி இருப்பதை கண்டறிந்தனர். அங்கு உள்ள விடுதி ஒன்றில் மேட்ரிமோனியல் மூலம் அறிமுகமான மற்றொரு இளம்பெண்ணுடன் தங்கியிருந்த போது சூர்யாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவன் பயன்படுத்திய காரில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் குற்றக்கட்டுப்பாட்டு கவுன்சிலின் உறுப்பினர் என்று போர்டு ஒன்றை மாட்டி வைத்திருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். டோல் கேட்டில் பணம் கொடுக்கமல் செல்வதற்கும் போலீசாரின் வாகன சோதனையில் இருந்து தப்புவதற்கும் வசதியாக இந்த ஏற்பட்டை அவன் செய்திருப்பது தெரியவந்தது.

சூர்யாவை சென்னை அழைத்து வந்த போலீசார் அவனது செல்போனை வாங்கி ஆய்வு செய்த போது, கானத்துரை சேர்ந்த பெண் உள்ளிட்ட வேறு சில பெண்களுடன் சூர்யா நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோ காட்சிகள் இருபதை கண்டு அதிட்ர்ச்சி அடைந்தனர்.

இந்த இளம்பெண்களை மேட்ரிமோனியல் மூலம் பெண் பார்ப்பது போல சென்று பழகி தனது காதல் வலையில் சிக்கவைத்து அவர்களுடன் தனிமையில் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பணம் பறிப்பதை கடந்த 5 வருடமாக சூர்யா முழு நேர தொழிலாகவே செய்து வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்தவகையில் ஆபாச வீடியோக்களை காண்பித்து பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் 100 சவரன்களுக்கும் மேற்பட்ட நகைகளை பெண்களிடம் இருந்து பறித்ததாக கூறப்படும் சூர்யாவிற்கு எதிராக இதுவரை சென்னை, திருச்சி, கோவை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 7 பேர் மட்டுமே புகார் அளித்துள்ளதாகவும், பலர் அவமானத்துக்கு பயந்து புகார் அளிக்க தயங்குவதாகவும் கூறப்படுகின்றது.

சூர்யாவின் தந்தை கர்நாடக காவல்துறையில் உளவு பிரிவு எஸ்.பியாக பெங்களூருவில் பணியில் இருக்கும் நிலையில், பெண்களிடம் ஏமாற்றி பறித்த பணத்தை மாதந்தோறும் பெங்களூரில் இருக்கும் தந்தையின் வங்கிக் கணக்கில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து சம்பாதிப்பதாக கூறி செலுத்தி வந்துள்ளான். சூர்யாவிடம் சிக்கிய இளம் பெண் ஒருவர் இவனது முரட்டு தனமான நடவடிக்கையால், உதிரப் போக்கு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய போலீசார். சூர்யா மீது பலாத்காரம், நம்பிக்கை மோசடி, கொள்ளை அடித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவனிடமிருந்து கருப்பு நிற டஸ்டர் கார் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மேட்ரி மோனியல் மன்மதன் சூர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 சிங்கிளாக வந்து திருமணத்துக்கு பெண் பார்க்கும் ஆண்களின் பின் விவரங்களை அறிந்து கொள்ளாமல் பேச்சில் மயங்கினால் மணப்பெண்களுக்கு என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதர்கு சாட்சியாய் மாறி இருக்கின்றது இந்த சம்பவம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments