குறைந்த விலையில் ஹெலிகாப்டரை தயரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் ; சோதனை ஓட்டத்தின் போது இறக்கை உடைந்து விபத்து

0 3839
சோதனை ஓட்டத்தின் போது ஹெலிகாப்டர் இறக்கை உடைந்து விபத்து

தனிநபர் பயன்பாட்டுக்காக குறைந்த விலையில் ஹெலிகாப்டரை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மகாராஷ்டிர மாநில இளைஞர் சோதனை ஓட்டத்தின் போது, ஹெலிகாப்டர் காற்றாடி உடைந்து வெட்டியதில் எதிர்பாராத விதமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் யாவத்மால் மாவட்டத்திலுள்ள Fulsawangi என்ற கிராமத்தைச் சேர்ந்த ஷேக் இஸ்மாயில் என்ற 28 வயது இளைஞர். இவர் புதிய புதிய கண்டுபிடிப்புகளில் அதீத ஆர்வம் கொண்டவர். 7 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஷேக் இஸ்மாயில் தன் கிராமத்தில் சிறிய மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார். சிறிய ஹெலிகாப்டர்களை தயாரித்து தனி நபர் பயன்பாட்டுக்கு சந்தைக்கு கொண்டு வர வேண்டுமென்பது ஷேக் இஸ்மாயிலின் நீண்ட கால கனவு. இந்த ஹெலிகாப்டரின் விலை 7 முதல் 8 லட்சம் ரூபாய் வரைதான் இருக்க வேண்டும் என்றும் ஷேக் இஸ்மாயில் கூறி வந்துள்ளார்.

இதற்காக, தன் மெக்கானிக் ஷாப்பில் கடந்த 2 ஆண்டுகளாக சிங்கிள் சீட் ஹெலிகாப்டரை தயாரித்து வந்தார். ஹெலிகாப்டருக்கு இன்ஜீனாக மாருதி 800 வாகனத்தின் இன்ஜீனை பயன்படுத்தியிருக்கிறார். தன் ஹெலிகாப்டருக்கு முன்னா ஹெலிகாப்டர் என்று பெயரும் வைத்திருந்தார்.

வரும் சுதந்திரத்தினத்தன்று தன்னுடைய ஹெலிகாப்டரை அறிமுகப்படுத்தி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்க வேண்டுமென்பது ஷேக் இஸ்மாயிலின் கனவாக இருந்தது. இதற்காக கடந்த10 ஆம் தேதி முதல் தன் ஹெலிகாப்டரை சோதித்து வந்தார். கேபினில் இருந்து ஷேக் இஸ்மாயில் ஹெலிகாப்டரை இயக்கியுள்ளார்.

அப்போது, ஹெலிகாப்டரின் மேல் இறக்கையும் பின் இறக்கையும் உடைந்து மோதிக் கொண்டதால் துண்டு துண்டாக வெடித்து சிதறியுள்ளன. கூர்மையான பிளேடு போன்ற பாகம் கேபினுள் இருந்த ஷேன் இஸ்மாயிலின் கழுத்தில் பாய்ந்துள்ளது. உடனிருந்த நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், வழக்கமாக எப்போது சோதனை நடத்தினாலும் ஷேக் இஸ்மாயில் தலையில் ஹெல்மட் அணிந்தே இருப்பார் என்றும் ஆனால், துரதிருஷ்டவசமாக விபத்து நடந்த தினத்தில் அவர் ஹெல்மட் அணியாமல் இருந்துள்ளார் என்றும் அதுவே, அவர் உயிரிழக்க முக்கிய காரணமாக அமைந்து விட்டது என்று கூறியுள்ளனர்.

தற்போது, ஷேக் இஸ்மாயில் தயாரித்த ஹெலிகாப்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரின் சகோதரர் மற்றும் நண்பர்களிடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments