மாறிவரும் சூழலில் சுற்றுச்சூழல், நிலம், வளங்களைக் காப்பது முதன்மையானது: குஜராத்தில் முதலீட்டாளர் மாநாட்டில் பிரதமர் உரை

0 2093

பழைய வாகனங்களைக் கழித்துக் கட்டுவதற்கான தேசியக் கொள்கையை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, மாறிவரும் சூழலில், சுற்றுச்சூழல், நிலம், வளங்கள் ஆகியவற்றைக் காப்பது முதன்மையானது என்றும், நீடித்த வளர்ச்சிக்கான முயற்சி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

குஜராத்தில் முதலீட்டாளர் மாநாட்டைக் காணொலியில் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, பழைய வாகனங்களைக் கழித்துக் கட்டும் தேசியக் கொள்கையையும் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், அடுத்த 25 ஆண்டுகள் நம் நாட்டுக்கு மிக முதன்மையானவை எனக் குறிப்பிட்டார். இந்தக் காலத்தில் வேலை முறை, அன்றாட வாழ்க்கை, தொழில் வணிகம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிவித்தார். தொழில்நுட்பம், வாழ்க்கை முறை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும் அதே நேரத்தில் சுற்றுச்சூழல், நிலம், வளங்கள் ஆகியவற்றைக் காப்பதும் முதன்மையானது எனத் தெரிவித்தார்.

தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றை எதிர்காலத்தில் செய்ய முடியும் என்றாலும் இயற்கை வளங்களைப் பூமித்தாயிடம் இருந்து மட்டுமே பெற முடியும் எனத் தெரிவித்தார். புதிய வளங்களை ஆழ்கடல் தேடல் மூலம் கண்டறிய இந்தியா முயல்வதாகக் குறிப்பிட்ட அவர், நீடித்த வளர்ச்சிக்கான முயற்சி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். பருவநிலை மாற்றத்தில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ள நேரத்தில் மக்களின் நலன் கருதிப் பெரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் முன்னதாகப் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பழைய வாகனங்களின் கழிவுகளைப் புதிய வாகனங்களின் உற்பத்திக்குப் பயன்படுத்துவதன் மூலம் மூலப் பொருளுக்கான செலவை 40 விழுக்காடு குறைக்க முடியும் எனத் தெரிவித்தார். வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதால் சரக்கு சேவை வரி மூலம் மத்திய அரசுக்கு நாற்பதாயிரம் கோடி ரூபாயும், மாநில அரசுகளுக்கு நாற்பதாயிரம் கோடி ரூபாயும் வருமானம் கிடைத்துள்ளதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments