பெட்ரோல் மீது மாநில அரசால் விதிக்கப்படும் வரி 3 ரூபாய் அளவிற்கு குறைக்கப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு

0 3634

பெட்ரோல் மீது மாநில அரசால் விதிக்கப்படும் வரி 3 ரூபாய் அளவிற்கு குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரத்து 756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக மின்ணனு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது. முந்தைய ஆட்சியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்த வரவு செலவுத் திட்ட அறிக்கையாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 32 ஆயிரத்து 599 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு ரூபாய் 5 ஆயிரத்து 369 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் என்றும், 25 கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏறத்தாழ 2500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து வாங்கியே தமிழக அரசு சமாளிக்கிறது என தெரிவித்த நிதியமைச்சர், கடந்த சில ஆண்டுகளில் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று தவறானது என விளக்கம் அளித்தார்.

நகர்புற ஊதிய வேலை வாய்ப்பு திட்டம் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்புறங்களில் நீர்நிலைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட திட்டங்களில் நகர்புற ஏழைகள் பயன்படுத்தப்பட்டு ஊதியம் வழங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூபாய் 2 ஆயிரத்து 756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவற்கான வழிமுறைகள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் நிதியமைச்சர் கூறினார்.

விவசாய நகைக்கடன்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தரத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய நிதியமைச்சர், முறைகேடுகளை களைந்து நகைக்கடன் தள்ளுபடி நடவடிக்கையை தமிழக அரசு செயல்படுத்தும் என்றார். பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை 3 ரூபாய் அளவிற்கு குறைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதாக தெரிவித்த பழனிவேல் தியாகராஜன், பெட்ரோல் மீதான வரியை 3 ரூபாய் அளவிற்கு குறைப்பதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஆயிரத்து 160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments