யூடியூப்பில் எடுத்த ரூ.2 கோடி பிச்சை.. பெக்கர் மதனின் டக்கர் பிளான்..!

0 6969

பாசமாக பேசி பப்ஜி விளையாடியதால் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் மதன், ஏழைகளுக்கு உதவுவதாக கூறி 2,800 நபர்களிடம் இருந்து 2 கோடியே 89 லட்சம் ரூபாயை வங்கி கணக்கு மூலம் வசூலித்து மெகா மோசடியில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிக்கையில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உழைக்காமல் கோடீசுவரனாவதற்கு செல் அப்பா வடிவேலு பாணியில் பெக்கர் மதன் போட்ட டக்கர் பிளான் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... 

சினிமா ஒன்றில் உழைக்காமல் கோடீசுவரனாவதற்கு செல் அப்பா வடிவேலு ஐடியா ஒன்றை கொடுப்பார். தான் எப்படி விளம்பரம் வெளியிட்டு ஒவ்வொருவரிடமும் 100 ரூபாய், 100 ரூபாயாக வாங்கி பணக்காரண் ஆணேனோ அதே போல நீங்களும் வசூலித்து பணக்காரன் ஆகி விடுங்கள் என்பார்..!

இந்த காட்சியில் வடிவேலு கொடுத்த ஐடியாவை கப் என்று பிடித்துக் கொண்ட பப்ஜி மதன் அதன்படியே பப்ஜி விளையாட்டின் நடுவே, ஏழைகளுக்கு உதவி செய்வதாக விளம்பரம் வெளியிட்டு ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி பணம் பெற்று கோடீசுவரனாகி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில் பெண்கள் குறித்த அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசி தனது யூ-ட்யூப் சேனல்களில் பதிவேற்றம் செய்த பப்ஜி மதன், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் , கெட்டவார்த்தை பேசியது குற்றமா? எனக் கேட்டு சில பப்ஜி நேசர்கள் பொங்கிய நிலையில், பப்ஜியை வைத்து மெகா மோசடி யில் ஈடுபட்டு வந்த மதனின் நிஜமுகம், போலீசார் தாக்கல் செய்துள்ள 1600 பக்க குற்றப்பத்திரிக்கையால் ஆதரங்களுடன் அம்பலமாகியுள்ளது.

இந்த குற்றப்பத்திரிக்கையில் பப்ஜி மதன் யூடியூப்பில் பதிவிட்ட வீடியோக்கள் மூலம் சம்பாதித்தது வெறும் 31 லட்சம் ரூபாய் மட்டுமே என்பது தெரியவந்துள்ளது. அவர் வைத்திருந்த இரு ஆடிக்கார்களும் அடையாறில் உள்ள செகண்ட்கேண்ட் கார்கள் விற்பனையகத்தில் இருந்து வாங்கியவை என்றும், ஒரு கார் 13 லட்சம் ரூபாய்க்கும், மற்றொரு கார் 47 லட்சம் ரூபாய்க்கும் மதன் வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. மதன், இரு கார்களின் உரிமத்தையும் தன் பெயருக்கு மாற்றாமல் பழைய உரிமையாளர் பெயரிலேயே வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. மதனுக்கு கார்களை விற்றவரை போலீசார் சாட்சியாக சேர்த்துள்ளனர்.

ஒன்றரை வருடத்தில் யூடியூப் மூலம் கிடைத்த மொத்த வருமனமே 31 லட்சம் என்ற நிலையில் 60 லட்சம் ரூபாய்க்கு மதனால் சொகுசு கார்கள் எப்படி வாங்க முடிந்தது? என்று விசாரித்த போது, பெக்கர் மதனின் டக்கர் பிளான் போலீசுக்கு தெரியவந்தது. தான் பப்ஜி விளையாடிக் கொண்டிருக்கும் போதே கொரோனா ஊரடங்கில் பலருக்கும் உதவி செய்வதாக பப்ஜி விளையாட்டுக்கு இடையே விளம்பரம் வெளியிட்ட மதன். மொத்தம் 2,848 நபர்களிடம் இருந்து 2 கோடியே 89 லட்சம் ரூபாயை மோசடியாக வங்கி பரிவர்த்தனை மூலம் வாங்கியிருப்பதாக மதன் மீது ஆதரத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வளசரவாக்கம் கோடாக் மஹிந்திரா வங்கி கிளையில் மதன் பெயரில் உள்ள வங்கி கணக்கில் இந்த பணம் கடந்த ஒன்றரை வருடங்களில் பப்ஜி நேசர்களிடம் இருந்து வந்து குவிந்துள்ளது. ஆனால் மதன் இதனை வைத்து எவருக்கும் பெரிய உதவிகள் எதையும் செய்யாமல் தனது சொகுசுவாழ்க்கைக்கு பயன்படுத்தி உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள போலீசார், இந்த வங்கி பண பரிவர்த்தனை தொடர்பான முழுமையான ஆதாரத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக பணம் கொடுத்து ஏமாந்த 30 சாட்சிகளின் வாக்குமூலமும் இந்த குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை போடப்பட்ட பின்னர் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய 90 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், பப்ஜி மதன் மீதான வழக்கில் சைபர்கிரைம் போலீசார் விரைவாக செயல்பட்டு 45 நாட்களில் குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடதக்கது.மதனின் மோசடிக்கு எதிராக மேலும் கூடுதலான குற்றப்பத்திரிக்கை இந்த வழக்கில் சேர்க்கப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments