கணவனுக்கு கோவில் கட்டி பூஜை செய்யும் பாசக்கார மனைவி..! கணவனே கண் கண்ட தெய்வமாம்..!

0 4373

விபத்தில் உயிரிழந்த கணவரின் நினைவாக கோவில் கட்டி அவருக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தி வரும் பாசக்கார மனைவி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்து வருகின்றது..!

விவசாய தொழில் செய்து வந்த அங்கி ரெட்டி - பத்மாவதி தம்பதிக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ள நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்து ஒன்றில் சிக்கிய அங்கிரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவருக்கு பின் விவசாயபணிகளை அவரது மகன் மேற்கொண்டு வந்த நிலையில் மறைந்த கணவனின் நினைவாகவே இருந்த பத்மாவதியின் கனவில் வந்த அவரது கணவர் கோவில் கட்ட சொன்னதாக கூறப்படுகின்றது. இதையடுத்து தனது கணவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற விருப்பத்தை தனது மகனிடம் கூறியுள்ளார் பத்மாவதி.

தாயின் விருப்பப்படியே தங்கள் விவசாய நிலத்தருகே தந்தையின் திருவுருவச்சிலையுடன் கோவிலை கட்டிக் கொடுத்திருக்கிறார் அவரது மகன், சப்பிராதாயத்துக்கு கோவிலை கட்டி பூட்டிபோட்டு வைத்திருக்காமல் தினமும் கோவிலில் உள்ள தனது கணவரின் சிலைக்கு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார் பத்மாவதி.

இந்தக் கோவிலை கட்டுவதற்கு தனது சேமிப்பு பணத்தை பத்மாவதி கொடுத்த நிலையில், மகனும், அவரது நண்பரும் பண உதவி செய்ததாக பத்மாவதி தெரிவித்திருக்கிறார். தினமும் தனது கணவருக்கு பூஜைகள் செய்தாலும், தனது கணவரின் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் பவுர்ணமி ஆகிய தினங்களில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார் பத்மாவதி

கணவனே கண்கண்ட தெய்வம் என்று கோவில் கட்டி பூஜை செய்யும் பத்மாவதியின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கணவன் இறந்துவிட்டார் என்று கலங்கி நிற்காமல் கணவனின் கனவுகளை நிறைவேற்றும் பத்மாவதியை போன்ற மனைவி கிடைப்பதும் ஒரு வரம் தான்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments