விளையாட்டில் பட்ட அடியை மறைத்ததால் குடும்பமே ஊனமான சோகம்..! உதவும் கரங்களுக்காக காத்திருப்பு

0 3010
விளையாட்டில் பட்ட அடியை மறைத்ததால் குடும்பமே ஊனமான சோகம்..! உதவும் கரங்களுக்காக காத்திருப்பு

சாத்தான்குளம் அருகே முதுகு தண்டுவட நோயால் அவதிப்படும் மகனின் பரிதாப நிலைய கண்டு தந்தை மனச்சிதைவு ஏற்பட்ட நிலையில்,  மகனை பராமரித்து வந்த தாயும் தற்போது வாத நோயால் அவதிப்படுவதால் மருத்துவத்திற்காக ஒரு குடும்பமே அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றது. பள்ளிச்செல்லும் வயதில் விளையாடும் போது உடலில் பட்ட அடியை மறைத்ததால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த பனைகுளம் கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் - பாக்கியசீலி தம்பதியருக்கு 3 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளான். 3 மகள்களுக்கும் திருமணம் முடிந்து அவரவர் கணவர் வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் முதுகு தண்டுவட நோயால் மாற்றுத்திறனாளியாக அவதிப்படும் 26 வயது மகன் தாவீதுராஜாவின் பரிதாப நிலையை கண்டு தந்தை தர்மராஜ் மனசிதைவுக்குள்ளாகியுள்ளார். தாய் கிடைக்கும் வேலைகளை செய்து தனது மகனையும், கணவரையும் பராமரித்து வந்துள்ளார்.

உழைக்க வேண்டிய வயதில் வேலைக்கு செல்ல இயலாமல் நோயாளியாய் படுத்த படுக்கையாய் குழந்தை போல கிடக்கும் தனது மகனை படுக்க வைப்பதற்கு நல்ல கட்டில் கூட இல்லாத நிலையில் பனை மட்டைகளை கொண்டு மரச்சட்டத்தில் அடுக்கி மகனுக்கு வலி தெரியாமல் இருக்க படுக்கை அமைத்துக் கொடுத்த தாய் பாக்கிய சீலியும் சிலமாதங்களுக்கு முன்பு வாத நோய் வந்து முடங்கி விட அவர்கள் 3 பேரும் மருத்துவ செலவுக்கு கூட பணமின்றி கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பள்ளிக்கூடம் சென்ற போது விளையாடும் ஆர்வத்தில் உடலில் பட்ட அடிகளை வீட்டில் சொல்லாமல் மறைத்ததால் திடீர் என்று ஒரு நாள் தனக்கு கைகாள்கள் செயல் விழுந்துவிட்டதாக கூறும் தாவீதுராஜா, பின்னர் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று பரிசோதித்த போது தலை உள்ளிட்ட உடலின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக முதுகு தண்டுவடம் நோயால் பதிக்கப்பட்டுள்ளதாக கூறியதாக தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் தனக்கு மாதந்தோறும் அரசிடம் இருந்து கிடைக்கும் 1000 ரூபாய் உதவி தொகை மருத்துவ செலவுக்கு கூட போதவில்லை என்று கூறும் தாவீதுராஜா, மனசிதைவுக்குள்ளான தர்மராஜ் ஊர் ஊராய் சென்று யாசகம் பெற்று வருவதை வைத்து குடும்பத்தினர் தங்கள் வயிற்று பசியை போக்குவதாகவும், முறையாக மருந்து சாப்பிட்டால் தாயின் வாத நோயாவது குணமாகும் அதற்காவது இரக்க குணம் கொண்ட உதவும் கரங்கள் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் தாவீதுராஜா

தானும் படுத்துக் கொண்டால் தனது மகனை யார் கவனிப்பார்கள் ? என்ற ஆதங்கத்தில் தனது கால்களை இழுத்து இழுத்து நடந்து சென்று மகனுக்குரிய பணிவிடைகளை அவ்வப்போது தாய் பாக்கியசீலி செய்வதை பார்க்கும் போது இதயம் கணக்கின்றது.

அவ்வப்போது உதவி வந்த உறவுகள் கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வருவாய் பாதிப்புக்குள்ளாகி உதவ இயலாமல் போக மூவரும் கடும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். தங்கள் 3 பேரது மருத்துவ செலவுக்கும் , வாழ்வாதாரத்துக்கும் அரசும், தொண்டுள்ளம் கொண்டோரும் உதவினால் தாங்களுக்கு பேருதவியாய் இருக்கும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைக்கின்றனர்.

சிறுவயதில் கால நேரமின்றி விளையாட்டில் ஆர்வமாய் இருக்கும் பள்ளி சிறுவர்கள் விளையாடும் போது உடலில் எங்காவது காயமில்லாமல் அடிபட்டால், அதனை மறைக்காமல் பெற்றோரிடம் சொல்லி தேவையான சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் உங்கள் துள்ளல் வாழ்க்கைக்கு இது போன்ற விபரீத காயங்கள் நிரந்தர தடை போட்டுவிடும் என்பதற்கு தாவீதுராஜாவே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments