காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கம்

0 2360

ட்விட்டர் விதிமுறைகளை மீறிவிட்டதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது. ராகுல்காந்தியை தொடர்ந்து, மேலும் 5 காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் அழுத்தம் காரணமாக 5 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லியில் 9 வயது தலித் சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அச்சிறுமியின் பெற்றோர் தம்மை சந்தித்து முறையிட்ட புகைப்படங்களை ட்விட்டரில் ராகுல்காந்தி பகிர்ந்திருந்தார். இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிடக் கூடாது என்ற விதியை மீறியதால், அந்த பதிவு நீக்கப்பட்டதோடு, ராகுல்காந்தியின் கணக்கை, தற்காலிகமாக முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், இதே விதிமீறலுக்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மாக்கன், அக்கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் ரண்தீப் சுர்ஜிவாலா, மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர், அசாம் மாநிலப் பொறுப்பாளர் ஜிதேந்திரா சிங், மகிளா காங்கிரஸ் தலைவி சுஷ்மிதா தேவ் ஆகிய 5 பேரின் கணக்குகளை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது. நடவடிக்கை இத்துடன் நிற்காமல், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கின் மீதும் பாய்ந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி, அதன் ட்விட்டர் பக்கத்தில் இனி பதிவுகள் இடவோ பதிவுகளை பகிரவோ முடியாதபடி, தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அந்த கணக்கில் உள்ள பழைய பதிவுகளை பின்தொடர்பாளர்கள் பார்க்கலாம். ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட தகவலை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காங்கிரஸ், தங்கள் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் என 5 ஆயிரம் பேரின் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

மத்திய அரசின் அழுத்தத்திற்கு பணிந்து ட்விட்டர் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ், மத்திய அரசோ ட்விட்டர் நிர்வாகமோ தங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்திவிட முடியாது என கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments