உடைந்தது இடது கால், வலது காலில் மாவுக்கட்டு..! அரசு மருத்துவமனை அலட்சியம்

0 4538
உடைந்தது இடது கால், வலது காலில் மாவுக்கட்டு..! அரசு மருத்துவமனை அலட்சியம்

மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இடதுகால் முறிந்த நபருக்கு வலது காலில் கட்டுப்போட்ட கவனக்குறைவான சம்பவம் தென்காசி அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது. தவறாக போடப்பட்ட கட்டை அவிழ்க்க மறுத்து அடம்பிடித்ததோடு, மேல் சிகிச்சைக்காக நெல்லைக்கு அனுப்பிவைத்த கறார் மருத்துவர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் தனது வீட்டு மாடியில் இருந்து கால்தவறி விழுந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.மருத்துவர்கள் அவருக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்து பரிசோதித்தபோது மாடசாமியின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு காலில் சிகிச்சை அளித்து மாவுகட்டுப் போட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் மாடசாமியின் இடதுகாலுக்கு பதில் வலதுகாலில் மாவுக்கட்டு போடப்பட்டிருப்பதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர் .அதாவது மருத்துவர்கள் கவனக்குறைவாக மாடசாமியின் இடதுகாலில் கட்டுபோடுவதற்கு பதில் வலதுகாலில் கட்டுபோட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய மாடசாமியின் உறவினர்கள் மருத்துவர்களிடம் கேட்டால் தெரியாமல் நடந்துவிட்டது என்றும், எலும்புமுறிவு அதிகமாக இருப்பதால் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசுமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றும் அலட்சியத்துடன் கூறியதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து வலதுகாலில் போடப்பட்ட மாவுக்கட்டை அவிழ்த்து முறைப்படி இடதுகாலில் போட்டு அனுப்பும்படி உறவினர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கும் மருத்துவர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தவறாக போடப்பட்ட கட்டுடன் மாடசாமியை அவரது உறவினர்கள் திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர் .

மாவுக்கட்டு மாறிய சம்பவம் குறித்து தென்காசி மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லினிடம் கேட்டபோது, மாடசாமி உயரமான இடத்திலிருந்து தவறி விழுந்ததில் இடுப்பிலும் அடிபட்டுள்ளது. இரண்டு கால்களிலும் அடிபட்டிருப்பதாகவும், இடது காலை விட வலது காலின் மூட்டில் வீக்கத்துடன் இரத்த கசிவு அதிகமாக இருந்ததால் அவருக்கு முதலில் வலது காலில் கட்டுப் போடப்பட்டதாகவும், பின்பக்கம் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருந்ததால் அவரை உடனடியாக நெல்லை மாவட்ட மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்ததாகவும் விளக்கம் அளித்தார்.

எக்ஸ்ரே ஆதாரத்துடன் முறிந்ததாக கூறப்படும் இடது காலில் ஏன் மாவுக்கட்டு போடவில்லை என்பதற்கு அவரிடத்தில் உரிய பதில் இல்லை. உடைந்த காலுக்கு மாவுக்கட்டு போடச்சொன்னா பக்கத்து காலுக்கு மாவுக்கட்டு போட்டு விடும் ஆடி ஆஃபர் ஏதாவது அறிவித்துள்ளார்களா? என்பதே மாடசாமி உறவினர்களின் ஆதங்கமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments