ஆன்லைன் வகுப்புகளால் 5 மடங்கானது கண் பாதிப்பு..! பெற்றோர்களே உஷார்..!

0 2106
ஆன்லைன் வகுப்புகளால் 5 மடங்கானது கண் பாதிப்பு..!

ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஆன்லைன் வகுப்புகளில் ஸ்மார்ட் போன் மூலம் கல்வி கற்று வரும் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கிட்டப்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கண்பார்வை பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட 5 மடங்கு உயர்ந்துள்ளதாகவும் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.  

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே செல்போன் மற்றும் லேப்டாப்கள் மூலம் ஆன்லைனில் கல்வி கற்று வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் ஸ்மார்ட் போன்களிலேயே தினமும் கல்வி கற்பதும், ஆன்லைன் கேம் விளையாடுவதும் தொடர்வதால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கண் அழுத்த நோய் மற்றும் கிட்டப்பார்வை பாதிப்புகள் அதிகரித்து வருவதாக அகர்வால் மருத்துவமனை அறிவித்துள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையை தலைமையிடமாக கொண்டு சென்னையில் 19 இடங்களில் செயல்பட்டு வரும் அகர்வால் கண் மருத்துவமனைக்கு கண் நோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொள்ள வருகை தரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆன்லைன் வகுப்புகள் தவிர்த்து செல்போன் விளையாட்டுக்களில் தொடர்ந்து மூழ்கிக் கிடக்கும் மாணவர்களுக்கு மையோப்பியோ எனப்படும், கிட்டப்பார்வை பாதிப்பு 100 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இன்னும் பிற பார்வை கோளாறுகளும் அதிகரித்து வருவதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பார்வை குறைபாடுகளுக்கு நீண்ட நேரம், செல்போன் , கணினி மற்றும் டிவி பார்ப்பது முக்கிய காரணமாக சுட்டிக்கட்டப்படுகின்றது. வீட்டிற்கு வெளியே சூரிய ஒளிபடுமாறு இல்லாமலும், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகள் மிகவும் குறைந்திருப்பதும் தான் கண் நோய்கள் அதிகரிக்க காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். பெருந்தொற்று பாதிப்பினால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு மாணவ, மாணவிகள் வீட்டுக்குள் முடங்கியதால் கிட்டப்பார்வை குறைபாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தவிர்க்க இயலாமல் செல்போன் மற்றும் கணினி பயன்படுத்துவோர் தொடர்ந்து அதில் மூழ்கி இருக்காமல் கண்களை சிமிட்டியபடியும்,அவ்வப்போது இடைவெளிவிட்டும் திரைகளை உற்று நோக்குவதன் மூலமும், ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்போன்களுக்கு பதிலாக, மடிக்கணினி அல்லது சற்று பெரியளவிலான கையடக்க கணினி பயன்படுத்துவதன் மூலமும் பாதிப்பை ஓரளவு குறைக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். தினமும் 3 மணி நேரத்தும் மேலாக செல்போனில் மூழ்கிக் கிடந்தால் தீவிர கண்பார்வை பதிப்புக்கு உள்ளாகி, கண்ணாடி அணியும் நிலையையும் தாண்டி கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.....

கண்பார்வை குறைபாட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறும் மருத்துவர்கள் ஆரம்ப நிலையில் கண் பாதிப்புக்குறித்து பெற்றோர்கள் , தங்கள் குழந்தைகளிடம் கேட்டறிந்து உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுருத்துகின்றனர்.

அதே நேரத்தில் மாணவர்கள் கண்பாதிப்பு அடையாமல் கல்வி கற்க ஏதுவான வகையில், செல்போன் பயன்பாட்டை கைவிட்டு பள்ளிக்கூடத்திற்கு சுழற்சி முறையில் மாணவர்களை வரவைக்கும் வழிவகையை நடைமுறைப்படுத்துவது மட்டுமே இப்போதைக்கு இந்த பாதிப்பை குறைக்க உதவும்..! அதைவிடுத்து செல்போன் பயன்படுத்துவதை குறைக்காமல், பப்ஜி, ப்ரீபயர் என நீண்ட நேரம் செல்போன் திரையை உற்று நோக்கினால் உங்கள் கண்களை உற்றுப்பார்போர் நடிகை ரம்பாவின் கண்களோடு ஒப்பிடுவதை தவிர்க்க இயலாது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments