முதல் காதலை எரித்த ஒத்த ரோசாவின் இரண்டாம் காதல் ..! கணவர் கொலை பின்னணி

0 4510
முதல் காதலை எரித்த ஒத்த ரோசாவின் இரண்டாம் காதல் ..! கணவர் கொலை பின்னணி

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே காதலித்து திருமணம் செய்த கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் ஒருவர், தனது இரண்டாவது காதலன் உதவியுடன் அவரது சடலத்தை எடுத்துச்சென்று எரித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த ஆதனஞ்சேரி, திருமகள் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி விமலாராணி இவர்களுக்கு 14 வயது மகனும் உள்ளார். இந்நிலையில் தங்கவேலுவின் செல்போனுக்கு அவரது சகோதரர் சக்திவேல் தொடர்பு கொண்ட போது, போனை எடுத்த தங்கவேல் மனைவி விமலா ராணி, தனது கணவரின் செல்போனை , தற்போது தனது மகன் ஆன்லைன் கிளாஸுக்கு பயன்படுத்தி கொண்டு இருப்பதாக கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.

மீண்டும் கடந்த 1ம் தேதி செல்போனில் தொடர்பு கொண்ட போது அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் 2ம் தேதி காலை சுமார் 9.30 மணிக்கு தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் என வந்ததால் சக்திவேல் சந்தேகமடைந்தார். இதையடுத்து தங்கவேலின் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீடு பூட்டிக்கிடந்தது. இதையடுத்து தங்கவேலின் தந்தை, சோமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகன் தங்கவேல், அவரது மனைவி விமலா ராணி, பேரன் ஹரிஷ் ராகவ் ஆகியோரை காணவில்லை என புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் 10ந்தேதி இரவு 7 மணியளவில் காணாமல் போன தங்கவேலின் மனைவி விமலாராணி அவரது மகன் ஹர்ஷாராகவ் உடன் காவல்நிலையத்தில் ஆஜர் ஆனார். மாயமான புகாருக்குள்ளான மூவரில் தங்கவேலு மட்டும் கொலையான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

10 வருடங்களுக்கு முன்பு தங்கவேலு, விமலராணியை காதலித்து திருமணம் செய்துள்ளர். சேலத்தில் வசித்த போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராஜா என்பவருடன் விமலா ராணிக்கு 2வது காதல் மலர்ந்துள்ளது. மனைவியின் நடத்தையில் உள்ள தடுமாற்றத்தை உணர்ந்த தங்கவேலு தனது வேலையை வேறு ஊருக்கு மாற்றிக் கொண்டு சோமங்கலம் வந்ததாக கூறப்படுகின்றது.

அதன் பின்னர் 7 வருடங்களாக ராஜாவுடன் செல்போனில் தொடர்ந்துள்ளது விமலா ராணியின் விபரீதக்காதல். தங்கவேலு வீட்டில் இல்லாத நாட்களில் ராஜா வீட்டுக்கு வந்து செல்வதை வாடிக்கையாக்கி உள்ளான். இந்த தகவல் அறிந்து கணவன் கண்டித்தும் விமலா ராணி தனது காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த மாதம் 28ந்தேதி தங்கவேலுடன் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அப்போது ஆத்திரத்தில் அரிவாள்மனையை எடுத்து அவரை வெட்டி கொலை செய்து விட்டதாக கூறி போலீசாரை அதிர வைத்துள்ளார் விமலாராணி.

அன்று இரவு 10 மணி வரை கணவரின் சடலத்தை வீட்டின் பெட்ரூமில் மறைத்து வைத்து அதன்பின் சேலத்தில் இருந்து ராஜாவை வரவழைத்து கணவரின் சடலத்தை அருகில் உள்ள ஏரியில் வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

தங்கவேலுவின் சடலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் 11ந்தேதி காலை 8 மணிக்கு ஏரியில் இறங்கித் தேடிய போது, அங்கு ஏதும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. மீண்டும் மனைவி விமலா ராணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக மாற்றி கூறியதால் அங்கு தேடும் பணியை நிறுத்திவிட்டு, இரண்டாவதாக அவர் சொன்ன தொழுப்பேடு பகுதியில் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம் தான் தங்கவேலின் சடலம் என்பதை உறுதிசெய்த போலீசார், சாக்கு மூட்டையில் கட்டிக் கொண்டு வந்த தங்கவேலுவின் சடலத்தை அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ராஜா, தீவைத்து எரித்துச் சென்றதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து தங்கவேல் மாயமான வழக்கை, கொலை வழக்காக மாற்றிய மணிமங்கலம் காவல்துறையினர் மனைவி விமலா ராணியை கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த 2 வது காதலன் ராஜாவை தேடி வருகின்றனர். கணவன் மனைவிக்குள் பேசி தீர்க்க இயலாத அளவிற்கான கருத்துவேறுபாடு என்றால் முறைப்படி நீதிமன்றத்தை நாடி பிரிந்து சென்று விடலாம். அதைவிடுத்து கொலை செய்தால் இருவரது வாழ்க்கையோடு பெற்ற குழந்தைகளின் எதிர்காலமும் சீரழிந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments