குலியன் பார் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை

0 1334

கொரோனா தொற்றால், குலியன் பார் என்ற அரியவகை நோயால், தடம் பாதிக்கப்பட்ட பிஞ்சு குழந்தையின்  பாதத்தை, மீண்டும் தடம் பதிக்கவைத்த மருத்துவர்களின் சிகிச்சை முறை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

நாமக்கல்லைச் சேர்ந்த ஞானசேகரன் - சுதா தம்பதியினரின் இரண்டரை வயது பெண் குழந்தை சரிஹாசினி. கடந்த மாதம் இறுதியில் சரிஹாசினிக்கு காய்ச்சல் ஏற்படவே, நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.

தனியார் மருத்துவமனையில், குழந்தையின் சிகிச்சைக்காக பணம் அதிகம் செலவாகும் என்பதை, மருத்துவரின் கவனிப்பால் மறைமுகமாக உணர்ந்த பெற்றோர், இரண்டாவது நாள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையை நாடியுள்ளனர்.

அங்கு, குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு இரண்டாவது நாள் என்பதால், தாய் மற்றும் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது.பரிசோதனையின் முடிவில், இருவருக்குமே தொற்று உறுதியான நிலையில், திடீரென குழந்தையின் இரண்டு கால்களும் செயல் இழந்து, எந்தவித அசைவுகளும் இல்லாததை உணர்ந்த மருத்துவர்கள், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ஏற்கனவே மருத்துவர்கள் அளித்த தொற்று சம்மந்தமான மருத்துவ குறிப்புகளுடன், குழந்தையை அழைத்து கொண்டு, சென்னை வந்த பெற்றோரை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவர்கள் உள் நோயாளியாக அனுமதித்து, குழந்தைக்கு அடுத்த கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

அப்போது சரிஹாசினிக்கு கொரோனா தொற்றால் அரிதாக ஏற்படக்கூடிய குலியன் பார் ( Quilian bare ) என்ற நோயால், குழந்தையின் இரண்டு கால்களும் செயல் இழந்திருப்பதை மருத்துவ குழுவினர் உறுதி செய்தனர்.

இதனை அடுத்து குழந்தையின் செயல் இழந்த கால்களை சரி வேண்டுமானால், அதிக தொகை கொண்ட இமுனோ குலோபாலின்  என்ற மருந்தை, ஊசி மூலம் உடலில் செலுத்த வேண்டும் என்பதை பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவர் ஸ்ரீனிவாசன் கூறியதையடுத்து, உடனடியாக அந்த மருந்து சரிஹாசினிக்கு உடலில் செலுத்தப்பட்டது.

இதன் மூலம் ஒருவார கால இடைவெளியில், செயல் இழந்த கால்களை ஊன்றி, மெல்ல மெல்ல சரிஹாசினி நடக்க தொடங்கி உள்ளார்.

பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவர்களின் சீரிய முயற்சியால், ஆபத்தான கட்டத்தை கடந்த சரிஹாசினி, இனிவரும் நாட்களில், தடையில்லாமல் தடம் பதித்து, பல சாதனைகளை படைக்க நாமும் வாழ்த்துவோம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments