ஈழத்தமிழ் பெண்ணுக்கு கடன்பட்ட பரம்பரை, நடிகர் ஆர்யா ஆஜர்..! போலீசார் விசாரணை

0 5278
ஈழத்தமிழ் பெண்ணுக்கு கடன்பட்ட பரம்பரை, நடிகர் ஆர்யா ஆஜர்..! போலீசார் விசாரணை

ஜெர்மனியைச் சேர்ந்த ஈழத் தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, 71 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக, புகாருக்குள்ளான நடிகர் ஆர்யா போலீஸ் விசாரணைக்காக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார். அவர் காவல்துறையை தேடி வந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சார்பட்டா பரம்பரை படம் மூலம் கவனிக்கதக்க நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் ஆர்யா, இவர் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக ஜெர்மனியின் சுகாதாரத்துறையில் பணிபுரியும் விட்ஜா என்ற பெண்ணுடன் வாட்ஸ் அப் மூலம் பழகி காதலித்ததாகக் கூறப்படுகின்றது.

இடையில் பல படங்கள் சறுக்கியதால் தனக்கு உதவும்படி ஆர்யா கேட்டுக் கொள்ள, வருங்காலக் கணவருக்கு உதவும் நோக்கத்தில் வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர் மூலம் 71 லட்சம் ரூபாய் வரை பணம் கடனாக கொடுத்ததாக விட்ஜா தெரிவித்திருந்தார். பணம் வாங்கும்வரை வாட்ஸ் அப்பில் காதல் மொழி பேசிய ஆர்யா, அந்த பெண் திருமணம் செய்து கொள்ள நெருக்கடி கொடுத்ததும் அவரை அவதூறாக பேசி நட்பை துண்டித்ததாகவும், ஜெர்மனியில் இருப்பவர் எப்படி தன்னிடம் பணத்தை திரும்ப பெற்றுவிட முடியும் என்ற எண்ணத்தில், தன்னை கைவிட்டு நடிகை சாயிஷாவை திருமணம் செய்த ஆர்யாவுக்கு எதிராக ஆதாரத்துடன் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு விட்ஜா புகார் அனுப்பியிருந்தார்.

அந்த புகார் குறித்து விசாரிக்காமல் மாதக்கணக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிடப்பில் போட்ட நிலையில் விட்ஜாவின் வழக்கறிஞரான ஆனந்தன் என்பவர் ஆர்யா மீதான விசாரணையை சிபிசிஐடி விசாரிக்க மனு அளித்தார். அந்தமனுவை பெற்ற சிபிசிஐடி அதனை சென்னை மத்திய குற்றபிரிவுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. இந்த தகவலை புகார்தாரரிடம் தெரிவிக்கவில்லை, இதையடுத்து விட்ஜா தரப்பில் சிபிசிஐடி போலீசர் தாங்கள் அளித்தன் புகாரை விரைவாக விசாரிக்கவும், தன்னிடம் பெற்ற பணத்தில் அவர் நடித்த படங்களுக்கும் தடைவிதிக்கவும் கோரி நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வழக்கை நீண்ட நாள் கையில் வைத்திருந்த சென்னை மத்திய குற்றபிரிவு போலீசார் தற்போது கையில் எடுத்துள்ளனர். வருகிற 18ந்தேதி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால் ஆர்யாவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றபிரிவு போலீசில் ஆஜரான அவரிடம் காவல் ஆய்வாளர் கீதா விசாரணை மேற்கொண்டார். பணம் பெற்றதற்கான வாட்ஸ் அப் சாட்டிங்கில் ஆர்யா கூறிய படி, வெஸ்டர் யூனியன் மணி டிரான்ஸ்பரில் அவரது உதவியாளர் பெயரில் பணம் அனுப்பியது உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் போலீசாரிடம் ஆதாரமாக விட்ஜா தரப்பில் கொடுக்கப்பட்ட நிலையில் ஆர்யாவிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் ஆர்யா அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

விட்ஜாவின் புகார் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் மீண்டும் ஆர்யா விசாரணைக்கு ஆஜராவார் என்றும் போலீசார் தெரிவித்தனர் . ஆனால் தற்போதுவரை விட்ஜாவுடனான தொடர்பு குறித்தும், கடன் பெற்றாரா? இல்லையா? என்பது குறித்தும் ஆர்யா எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நடிகர் ஆர்யாவிடம் மீண்டும் விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட விசாரணையில் ஆர்யாவிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெறப்பட்ட நிலையில், மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள சைபர் கிரைம்போலீசார், வழக்கிற்கு தேவையான ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், விசாரணையின் விபரங்களும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் எனக் கூறும் போலீசார், தற்போது மும்பை சென்றுள்ள ஆர்யா, 17-ந் தேதிக்கு பிறகு மீண்டும் விசாரணைக்கு ஆஜராவார் என கூறியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments