சென்னையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

0 1589

சென்னை எம்.ஆர்.சி நகரில் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர்கள் நந்தகுமார், புகழேந்தி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

சென்னையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடையதாகக் கூறப்படும் 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி நகர் சத்யதேவ் அவென்யூவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 7வது பிளாக்கில் 5 வது தளத்தில் 4 வீடுகளில் சோதனை நடைபெற்றது. அங்கு எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் தங்கியுள்ள நிலையில், இந்த வீட்டிலிருந்தே காலையில் எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏ ஹாஸ்டல் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. எனவே, எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

 சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள "நமது அம்மா நாளிதழ்" அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றது. அந்த அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் 4 தளங்களிலும் பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கேசிபி நிறுவனத்தின் அலுவலகமும் அங்கு உள்ள நிலையில், அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

 சென்னை கோடம்பாக்கம் ரெங்கராஜாபுரம் பிரதான சாலையில் உள்ள, எஸ்.பி. வேலுமணியின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுபவரின் வீடு மற்றும் கேசிபி இன்ஃப்ரா நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளரும், எஸ். பி.வேலுமணியின் உறவினர் என்று கூறப்படுபவருமான நந்தகுமார் இல்லத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அடையாறு காந்தி நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல, சென்னை மாநகராட்சியின் மற்றொரு தலைமைப் பொறியாளரான புகழேந்தி வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள இரண்டு வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை தேனாம்பேட்டையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுபவரின் AALAM கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் Ar Es Pe Infra என்ற நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனம் எஸ்.பி.வேலுமணியின் உறவினருக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் அய்யாதுரை என்பவரது வீடு, அலுவலகத்திலும் காலையில் இருந்தே சோதனை நடத்தப்பட்டது.

எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 7 பேர் மற்றும் 10 நிறுவனங்கள் தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில்  லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தப்பட்டது. அதிகாரிகள் உட்பட 250 லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரும், துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் 250 பேர் என 500-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட்டனர்.   

சென்னையில் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில், ஏராளமான ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments