வயிற்றுக்குள் பஞ்சை வைத்து தைத்த கொடூரம் .. பம்மல் கே சம்பந்தம் போல் ஒரு சம்பவம்..!

0 4241
வயிற்றுக்குள் பஞ்சை வைத்து தைத்த கொடூரம் .. பம்மல் கே சம்பந்தம் போல் ஒரு சம்பவம்..!

சென்னையில் தனியார் மருத்துவமனைக்கு கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு அலட்சியமாக வயிற்றுக்குள் பஞ்சு வைத்து தைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பம்மல் கே சம்பந்தம் படத்தில் அறுவை சிகிச்சையின் போது வயிற்றுக்குள் வாட்சை வைத்து தைத்தது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.

இதேபோன்று, சென்னை வியாசர்பாடியில் அறுவைச் சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் பஞ்சை வைத்து தைத்த அலட்சியம் அரங்கேறியுள்ளது. பி.வி.காலனியைச் சேர்ந்த 46 வயதான நீலவேணி, கடந்த ஆண்டு வயிற்று வலி ஏற்பட்டு, பெரம்பூரிலுள்ள அய்யப்பா மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளார்.

பரிசோதனையில் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாக கூறிய மருத்துவர்கள், அதை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளனர். நீலவேணியும் மருத்துவர்களின் பரிந்துரையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

பின்னர், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த சில நாட்களில் மீண்டும் வயிற்று வலி ஏற்படவே, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களை நீலவேணி அணுகியுள்ளார். அதற்கு அவர்கள் நல்ல முறையில் தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், இதற்கு மேல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சென்று பார்த்துகொள்ளுமாறும் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

வீட்டு வேலை செய்து வந்த நீலவேணி ஏற்கனவே கடன் வாங்கி கர்ப்பப்பை கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில், வயிற்று வலிக்கு சிகிச்சை செய்ய முடியாமல் சுமார் ஆறு மாத காலம் அவதிப்பட்டு வந்துள்ளார். பின்னர், சகோதரர் உதவியுடன் ஆந்திர மாநிலம் புத்தூரிலுள்ள சுபாஷினி மருத்துவமனைக்கு சென்ற போது தான், ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் போது அலட்சியமாக வயிற்றுக்குள் பஞ்சு வைத்து தைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

வயிற்றுக்குள் பஞ்சு இருந்த குடல் பகுதி அழுகியதால், அவற்றையும் அகற்ற மற்றொரு அறுவை சிகிச்சையும் நீலவேணிக்கு செய்யப்பட்டது. தனது இந்த நிலைக்கு அய்யப்பா மருத்துவமனை மருத்துவர்கள் தான் காரணம் என கண்ணீர் விட்டு அழுத நீலவேணி, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய புகார் மீது செம்பியம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி ஆவணங்களுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க பெரம்பூர் அய்யப்பா மருத்துவமனை நிர்வாகியை தொடர்பு கொண்டும் அவர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments