மனைவிக்கு தாயாக மாறிய கணவன்..... துன்பத்திலும் துளிர்க்கும் காதல்...!

0 5310
மனைவிக்கு தாயாக மாறிய கணவன் ..... துன்பத்திலும் துளிர்க்கும் காதல்

 ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கை, கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையாக இருக்கும் காதல் மனைவியை, 15 ஆண்டுகளாக குழந்தையை போல் தூக்கிச் சுமந்து கவனித்து வரும் கணவர், அரசு உதவி செய்ய கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். மனைவிக்கு தாயாக மாறிய கணவனின் பாசம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

விபத்தில் சிக்கி கால் உடைந்த போதிலும் தன்னை நம்பி வந்த மனைவியை கைவிடாமல், பிச்சைக்காரர் ஒருவர் முதுகிலேயே தூக்கி சுமப்பது போன்ற காட்சிகள் விஜய்யின் பிரியமானவளே திரைப்படத்தில் படமாக்கப்பட்டிருக்கும்.

இதேபோன்றதொரு சம்பவம் தான் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நடந்துள்ளது. அரக்கோணம் அடுத்த அம்மனூர் மதூரா ரெட்டி கண்டிகையைச் சேர்ந்தவர்கள் நெப்போலியன் - மஞ்சுளா தம்பதி. கடந்த 2005-ஆம் ஆண்டு காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்ட இருவருக்கும், பெற்றோரின் ஆதரவும் இல்லாமல் போனது.

இவர்களது காதலுக்கு சாட்சியாக 2006-ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில், மகப்பேறுக்கு பின்னர், மஞ்சுளாவுக்கு கழுத்துக்கு கீழுள்ள உடற் உறுப்புகள் செயலிழந்ததாக கூறப்படுகிறது. பிரசவத்தின் போது அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால், இதுபோன்று கை, கால்கள் செயலிழந்ததாக சொல்லப்படும் நிலையில், ஆசை, ஆசையாய் பெற்ற பிள்ளைக்கு தாய்ப்பால் கூட கொடுக்கமுடியாத நிலையில் மஞ்சுளா இருந்ததாக கண்ணீருடன் கூறுகிறார் கணவர் நெப்போலியன்.

அப்போதில் இருந்தே மனைவியை தன்னுடைய பெண் குழந்தையாக பாவித்துக் கொண்ட நெப்போலியன், மனைவியை தூக்கிக் கொண்டு அலையாத இடமில்லை, செல்லாத மருத்துவமனை இல்லை. கடைசியில், விதி விட்ட வழி என வீட்டிலேயே வைத்து மருந்து, மாத்திரைகள் வழங்கி பராமரித்து வருகிறார்.

இயற்கை உபாதைகள் கூட படுக்கையிலேயே கழிக்கும் பரிதாப நிலையில் இருக்கும் தன்னை, காடு, மேடு என பாராமல் கணவன் வீல் சேரில் வைத்து தள்ளிக் கொண்டே செல்வதாகவும், நவீன வசதியுடன் கூடிய மோட்டார் பொருந்திய வீல் சேர் வழங்கவேண்டும் என அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார் மஞ்சுளா.

ஏற்கனவே மலையளவு பாரத்தை சுமந்து கொண்டிருக்கும் இந்த குடும்பத்தின் மீது 2 ஆண்டுகளுக்கு முன் மற்றொரு பேரிடியும் விழுந்தது. நெப்போலியனுக்கு இருதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தும் குடும்பத்தின் கையறு நிலையைக் கருத்தில் கொண்டு சிகிச்சை செய்துக் கொள்ளாமல் இருந்து வருகிறார்.

மனைவியை கவனிப்பதிலேயே முழு நேரத்தையும் செலவழிக்க வேண்டிய சூழலில், வீட்டில் இருந்தே வேலை செய்யும் வகையில் ஏதேனும் சுய தொழிலை அரசு அமைத்து கொடுத்தால் குடும்ப வருமானத்திற்கு உதவியாக இருக்கும் எனவும் நெப்போலியன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது, அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் இவர்களது மகன் முத்துபோலன், பிறந்ததில் இருந்தே தன்னுடைய அம்மா தன்னை தொட்டுத் தூக்கியது கூட இல்லை என ஏக்கத்துடன் கூறுவது கண்கலங்கச் செய்கிறது.

தன்னார்வலர் வழங்கிய வீட்டில் வசித்து வரும் இவர்களுக்கு இலவசமாக வீடு கட்டிதருவதோடு, மஞ்சுளாவுக்கு நவீன வீல் சேர் வழங்கி, நெப்போலியனின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி, ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற கனவோடு காத்திருக்கும் முத்துபோலனின் மேற்படிப்புக்கும் அரசு உதவி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

வரதட்சனை கொட்டிக் கொடுத்தாலும் சின்ன சின்ன காரணத்திற்காக மனைவியை விட்டு பிரியும் இந்த காலத்தில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனது காதல் மனைவியை 15 ஆண்டுகளாக குழந்தையாக கவனித்து வரும் கணவன் சமுதாயத்தில் ஒரு படி உயர்ந்து நிற்கிறார் என்பதே உண்மை...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments