தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.2.63 லட்சம் கடன் சுமை உள்ளது -நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

0 5630

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வாங்கிய கடன்களுக்கு தமிழக அரசு தினசரி 87 கோடி ரூபாய் வட்டி கட்டுவதாகத் தெரிவித்தார். தமிழகத்தின் மொத்த கடன் உண்மையில் 5 லட்சத்து 24ஆயிரம்  கோடி ரூபாய் என தெரிவித்த அவர், தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் 2 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்  பொதுக் கடன் சுமை உள்ளது என கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடன், வருவாய், செலவினங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் நிலை, வளர்ச்சி, சரிசெய்வதற்காக எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் அடங்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
தமிழகத்தின் வருமானம் குறைந்து செலவு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த 5 ஆண்டுகளில் பெற்ற 3 லட்சம் கோடி ரூபாய் பொதுக்கடனில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய், வருவாய் பற்றாக்குறையை சரி செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.  2006-2011 காலகட்டத்தில் வருவாய் பற்றாக்குறை 2 ஆயிரத்து 385 கோடி என்றும், 2011 - 2016 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை - ரூ.17,058 கோடி என்றும், கடந்த 2016 - 2021 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை - 1 லட்சத்து 55ஆயிரம் கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் 2 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் பொதுக் கடன் சுமை உள்ளது என்றும் அமைச்சர் கூறினார். நாள் ஒன்றுக்கு 87 கோடி ரூபாய் வட்டி கட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் செலவினத்தில் அதிக தொகை மானியங்களுக்கே செல்கிறது எனக் கூறிய அமைச்சர், தமிழக அரசின் மானியங்கள் பெறுபவர்கள் குறித்த தகவல்கள் முறையாக இல்லை என்றும் குறிப்பிட்டார். 15 வருடங்களாக மோட்டார் வாகனங்கள் மீதான வரி சீரமைக்கப்படவில்லை என தெரிவித்த அவர், உள்ளாட்சி அமைப்புகள் கடந்த பல ஆண்டுகளாக சொத்து வரியை மாற்றி அமைக்கவே இல்லை என்றும், உள்ளாட்சி அமைப்புகளில் நிர்வாக சீர்கேடுகளால் தமிழக அரசுக்கு அதிக இழப்பு ஏற்பட்டதாகவும் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாத காரணத்தினால் ரூ.2500 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறிய நிதியமைச்சர் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடி அளவிற்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தர வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார். மின் மற்றும் போக்குவரத்து துறைகளின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த கடன்கள் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் என்றும், மாநிலப் போக்குவரத்து நிறுவனங்கள் இயக்கும் வாகனங்கள் ஒரு கிலோமீட்டருக்கு 59 ரூபாய் 15 காசுகள் இழப்பை ஏற்படுத்துகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு இல்லாமல் டீசல் விலையில் திருத்தம், நிர்வாகக் குறைபாடுகள், அதிக ஊழியர் மற்றும் ஓய்வூதியச் செலவு ஆகியவை காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

குடிநீர் பயன்பாட்டை தெரிந்து கொள்ள மீட்டர் பொருத்தினால் வதந்தி பரப்புவார்கள் என்று பதிலளித்த பழனிவேல் தியாகராஜன் மீட்டர் பொருத்தினால் நன்மை தான் எனக் குறிப்பிட்டார். 1 ரூபாய் கடன் வாங்கினால் 50 பைசா முதலீட்டிற்கு செலவு செய்திருக்கிறோம் என எடப்பாடி பழனிசாமி சொல்வது, அவர் செய்த தவறை அவரே ஒப்பு கொள்வதாகத்தான் அர்த்தம் என அமைச்சர் பதிலளித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழக நிதி நிலையை சீரமைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்த நிதியமைச்சர், நிதிநிலையை காரணம் காட்டி திமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திசை திருப்பமாட்டோம் என உறுதியளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments