தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை ; சேலம், ஈரோடு மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்

0 8761
சேலம், ஈரோடு மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சேலம் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவில், மாநகர எல்லைக்குள் செயல்படும் அனைத்து மால்கள், ஜவுளி கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்கள் ஆகியவை ஏ.சி.வசதியின்றி மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று செயல்பட முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாட்களில் ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள், கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூங்கா, சுற்றுலா தளங்கள், அருங்காட்சியகங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்கள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பால் மற்றும் மருந்தகங்களை தவிர்த்து காய்கறி கடைகள், மளிகை கடைகள், பேக்கரி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இன்றியமையாப் பொருட்கள் கடைகளைத் தவிர மற்ற கடைகள், வணிக நிறுவனங்களைத் திறக்கக் கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் 33 வணிகப் பகுதிகளில் அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. பல்லடத்தில் ஒரு பகுதியிலும், உடுமலை, தாராபுரம் நகரங்களில் தலா 6 பகுதிகளிலும் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

கோவையில் கொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், அத்தியாவசிய கடைகளை தவிர, பிற கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மால்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments