கொரோனா பரவல் எதிரொலி ; சேலம் மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

0 7943
சேலம் மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, சேலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

சேலம் மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் அனைத்து மால்கள், ஜவுளி கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்கள் ஆகியவை ஏ.சி.வசதியின்றி மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

மேலும், மேற்குறிப்பிட்ட வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று செயல்பட முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. செவ்வாய்பேட்டை மெயின்ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி நோடு, பால் மார்க்கெட், லீபஜார், வீரபாண்டியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 6 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும்.

வ.உ.சி மார்க்கெட், சின்னகடை வீதி ஆகிய இடங்களில் செயல்படும் பூ, பழம் மற்றும் காய்கறி கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாட்களில் ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள், கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

கொங்கணாபுரம் வாரச்சந்தை, வீரகனூர் வாரச்சந்தை வருகிற 23-ந் தேதிவரை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை பூங்காவுக்கும் வருகிற 23-ந் தேதிவரை பொதுமக்கள் வர தடை விதிக்கப்படுகிறது.

இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, திறந்த வெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் உடல்வெப்ப பரிசோதனை, முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments