காலில் விழுந்தாரா ? விழ வைத்தார்களா? வீடியோவை வைத்து பேரமாம்..! சாதியால் சதுரங்க விளையாட்டு

0 9793
காலில் விழுந்தாரா ? விழ வைத்தார்களா? வீடியோவை வைத்து பேரமாம்..! சாதியால் சதுரங்க விளையாட்டு

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே விவசாயி காலில் விழுந்து வி.ஏ.ஓ வின் உதவியாளர் மன்னிப்புக்கேட்ட வீடியோ வெளியான விவகாரத்தில், வீடியோவை வைத்து பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் கும்பல், சாதியை வைத்து விளையாடியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அடுத்த ஒட்டர் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கோபால்சாமி, இவர் அங்குள்ள வி.ஏ.ஓ அலுவலகம் சென்றுள்ளார். தனது தந்தையின் பெயரில் உள்ள பட்டாவில் அவரது கையெழுத்தில்லாமல் பெரியப்பாவின் பெயருக்கு மாற்றம் செய்து கொடுத்தது எப்படி என்று அங்கிருந்த விஏஒ கலைச்செல்வியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது கோபால்சாமிக்கும் வி.ஏ.ஓ கலைச்செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த விஏஓ அலுவலக உதவியாளரான தண்டல்காரர் முத்துசாமி தடுக்க முற்பட்டபோது கோபால்சாமியை அடித்து தள்ளிவிட்டதாக கூறப்படுகின்றது. உடன் சென்றிருந்த உறவினர் கீழே விழுந்த கோபால்சாமியை தூக்கி அமரவைத்ததாக கூறப்படுகின்றது.

அதன் பின் நடந்தவற்றை கோபல் சாமி விவரித்தார், இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இருவரை பார்த்ததும், முத்துச்சாமி அங்கு நடந்த தகராறை சாதி பிரச்சனையாக மாற்றும் திட்டத்துடன் அவரே அவரது சாதி பெயரை சொல்லி இழிவு படுத்திக் கொண்டு தான் சொன்னதாக பழியை போட்டதாக குற்றஞ்சாட்டுகிறார் கோபால் சாமி......

அதேபோல, யாரும் எதிர்பார்க்காத வகையில் முத்துச்சாமி திடீரென்று தனது காலில் விழுந்து மன்னித்து விடுமாறு கும்பிட்டதாகவும் கோபால் சாமி தெரிவித்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத தானும் , தனது அக்காள் மகனும் எழுந்திரு என கூறி சமாதானப்படுத்தியதாக தெரிவித்த கோபால் சாமி, அங்கிருந்து தாங்கள் வெளியே வந்த போது வீடியோ எடுத்த இருவரும் தனது செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டதாக தெரிவித்தார்.

இதற்கிடையே அன்னூர் காவல் நிலையம் சென்று தண்டல்காரர் முத்துச்சாமி தன்னை தாக்கியதாக புகார் அளித்ததாகவும், பதிலுக்கு வி.ஏ.ஓ கலைச்செல்வியும் புகார் அளித்ததால், விசாரணைக்கு பின்னர் இருவரும் சமாதானமாக செல்வதாக எழுதிக்கொடுத்துச் விட்டு சென்றதாக கோபால்சாமி கூறினார்

இந்த நிலையில் வீடியோ எடுத்த நபர்கள் கோபால்சாமியின் காலில் முத்துசாமி விழும் காட்சியை மட்டும் எடிட் செய்து வாட்ஸ் அப்பில் சாதிய வன்கொடுமை என்று பரப்ப, அது குறித்து விசாரிக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் விசாரணைக்கு உத்தரவிடும் அளவுக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் லலிதா அலெக்ஸ் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்திய நிலையில், தங்களிடம் உள்ள முழு வீடியோவை கொடுக்க வேண்டும் என்றால், தனது கூகுள் பே அக்கவுண்டில் பணம் போட்டு விடும்படி, வீடியோ எடுத்து வைத்திருக்கும் ராஜா என்ற நபர் பேரம் பேசியதாக கோபால்சாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோபால்சாமியிடம் பணம் கேட்டு மிரட்டிய குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் டெல்லி கிரைம் என்ற பத்திரிக்கையில் வேலைப்பார்ப்பதாக கூறும் ராஜாவிடம் விசாரித்த போது, முத்துச்சாமியை சாதியின் பெயரை சொல்லி திட்டி கோபால்சாமி மன்னிப்பு கேட்க வைத்ததாக கூறப்படும் வீடியோ ஆதாரம் ஏதும் அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் வீடியோ எடுத்து அதனை எடிட் செய்து சாதிய வன்கொடுமை என்று சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டவர்களை பிடித்து காவல்துறை முறையாக விசாரித்தால் போதும் உண்மை வெளிச்சத்துக்கு வரும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments