ஒலிம்பிக் தடகளத்தில்., இந்தியாவுக்கு முதல் தங்கம்.! சரித்திர நாயகன் நீரஜ் சோப்ரா.!

0 4213

இந்திய ஒலிம்பிக் தடகள வரலாற்றில் முதல் தங்கம் வென்று ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா நூற்றாண்டு சாதனை படைத்துள்ளார். ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்று தந்த அரியானா வீரருக்கு பாராட்டு மழை குவிகிறது. 

டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87 புள்ளி 58 மீட்டர் தூரம் எறிந்து முதல் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.

12 போட்டியாளர்களை எதிர்த்து களமிறங்கிய நீரஜ் சோப்ரா 6 முறைகளில் அதிகபட்சமாக 87 புள்ளி 58 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார். தங்கம் வென்ற நீராஜ் சோப்ராவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பங்கேற்ற முதல் போட்டியிலேயே தங்கம் வென்று இதற்கு முன் இல்லாத வெற்றியை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் வரலாறு எழுதப்பட்டுள்ளது என்றும், நீரஜ் சோப்ராவின் சாதனை எக்காலமும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்.

120 ஆண்டுக்காலமாக ஒலிம்பிக் தடகளப் போட்டியில் பதக்கம் வெல்லாத குறை நீங்கியுள்ளதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அரியானா, பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள், உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பதக்கம் வென்ற நீராஜ் சோப்ராவுக்கு, அரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் 6 கோடி ரூபாய் பணம், குரூப் 1 பிரிவில் அரசு வேலை, மானிய விலையில் வீட்டுமனை, பஞ்சகுலாவில் அமைய உள்ள தடகள வீரர், வீராங்கனைகளுக்கான மையத்தின் தலைவராக நியமிக்கப்படுவார் என அறிவித்துள்ளார்.

அதேபோல் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் 2 கோடி ரூபாய், இந்திய கிரிக்கெட் வாரியம் 1 கோடி ரூபாய், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு கோடி ரூபாய், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பரிசுத் தொகை என பரிசு மழை கொட்டுகிறது.

இந்திய ராணுவத்தின் Rajputana Rifles 4-வது படைப் பிரிவில் சுபேதார் மேஜராக இருக்கும் நீரஜ் சோப்ரா, காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் என மும்முனை போட்டிகளில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

நீரஜ் சோப்ராவின் வெற்றியை தொடர்ந்து அவரது சொந்த ஊரான அரியானா மாநிலம் பனிபட்டில் பெற்றோர், உறவினர்கள், பொது மக்கள், ராணுவ வீரர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments