கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக டிசி வழங்க மறுக்க கூடாது: தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

0 4336
கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக டிசி வழங்க மறுக்க கூடாது: தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களுக்கு டிசி வழங்க மறுக்க கூடாது என தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பேரிடர் காரணமாக தனியார் பள்ளிகளில் கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்கள் வேறு பள்ளிகளிலும், அரசு பள்ளிகளிலும் சேர்ந்து வருகின்றனர். அந்த மாணவர்களுக்கு சம்மந்தப்பட்ட பள்ளிகள் டிசி வழங்க மறுப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து சுயநிதி பள்ளிகள் சங்கம் சார்பில் தொடர்ந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். மாணவர்களின் கட்டணத்தை நம்பியே செயல்படும் நிலையில், படிப்பை தொடர்பவர்கள், வேறு பள்ளிகளுக்கு செல்பவர்கள் குறித்த விவரங்கள் தெரியாவிட்டால் பாதிப்பு ஏற்படும் என தனியார் பள்ளிகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

எந்த காரணத்திற்காகவும் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காகவே மாற்றும் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்க்க கல்வித்துறை அதிகாரிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,

டிசி கோரி விண்ணப்பித்த மாணவருக்கு, எந்த ஒரு காரணத்திற்காகவும் அதை மறுக்க கூடாது எனவும், டிசி தராத பள்ளிகளுக்கு எதிராக முதன்மை கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இரு வாரங்களில் உரிய சுற்றறிக்கை அனுப்புமாறும் பள்ளிக் கல்வி ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

டிசி வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்டால், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் தனியார் சுயநிதி பள்ளிகளை நீதிபதி எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments