வாங்க ஏழைங்களா..! செஞ்சிருவேன் ஹீரோவை பஞ்சராக்கிய நீதிமான்..!

0 7246

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவுவரி கட்டுவதில் விலக்கு கேட்ட விவகாரத்தில் நடிகர் விஜய்யை வறுத்தெடுத்த அதே நீதிபதியின் கீழ் தங்கள் வழக்கு விசாரணைக்கு வந்ததால், சொகுசு காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்ட மனுவையே வாபஸ் பெற்றுக்கொள்ளவதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நீதிபதி சுட்டிக்காட்டிய கருத்துக்கள் திரையில் பஞ்ச் வசனம் பேசிய நம்ம ஹீரோக்களின் இமேஜை நிஜத்தில் பஞ்சராக்கி உள்ளது.

சினிமா ஒன்றில் காட்சிக்கு காட்சி நடிகர் தனுஷ் கையை நீட்டி செஞ்சிருவேன்னு... சொல்லிக்கிட்டு திரிவார்..! அப்படி ஒரு சம்பவம் அவருக்கு எதிராக நிஜத்தில் அரங்கேறியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த டைமண்ட் நிற ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு முறையாக இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், கூடுதலாக 63 லட்சம் ரூபாய் நுழைவு வரி கட்டச்சொல்வதாகவும், அதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கும் படி கேட்டு தனுஷ் தரப்பில் நீதிமன்றத்தில் 2015 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே நடிகர் விஜய், தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்டு மனு தாக்கல் செய்த போது நடிகர்கள் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று கூறி கருத்துக்களால் காய்ச்சி எடுத்த அதே நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியத்திடம் தனுஷின் வழக்கும், விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இதையடுத்து உஷாரான தனுஷ் தரப்பு தங்கள் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் இருந்துள்ளனர்.

தனுஷின் மனுவில் அவர் என்ன தொழில் செய்கிறார் என்பதை குறிப்பிடவில்லை என்று கூறப்படுகின்றது. வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாக தனுஷ் தரப்பில் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கூறிய நிலையில் மனுவில் தெரிவித்த விவரங்களை பார்த்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மனுதாரர் கே. தனுஷ் என்பவர் யார்? என்ன வேலை பார்க்கிறார்? எனக் கேட்க, மனுதாரர் நடிகர் தனுஷ் என்றும், மனுவை தாங்கள், திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் தனுஷ் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று, உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டே உத்தரவிட்ட நிலையில், அப்போதே மனுவை வாபஸ் பெற்றிருக்க வேண்டும், அல்லது நிலுவையில் உள்ள நுழைவு வரியை அரசுக்கு முழுமையாக செலுத்தி விட்டு மனுவை வாபஸ் பெற்றிருக்க வேண்டும், இப்போது அனுமதிக்க இயலாது என நீதிபதி கூறினார்.

50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாமானியன் அல்லது சோப்பு வாங்கும் பொதுமக்கள் கூட வரி செலுத்திதானே பயன்படுத்துகிறார்கள் என்றும், பெட்ரோலுக்கு வரி கட்ட முடியவில்லை என்று அவர்கள் என்ன நீதிமன்றத்தையா நாடுகிறார்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, மக்கள் வரிபணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும் போது, வரியை செலுத்த வேண்டியது தானே என்று தனுசுக்கு அறிவுறுத்தினார்.

திங்கட்கிழமைக்குள் நுழைவு வரி பாக்கியை கட்டிவிடுவதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், வணிகவரித்துறை கணக்கிட்டீன் படி மீதமுள்ள நுழைவு வரியான 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாயை இன்னும் 48 மணி நேரத்திற்குள்ளாக செலுத்த வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார் நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம். மேலும் மனுதாரர் என்ன தொழிலில் இருக்கிறார் எனக்கூறிப்பிடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, என்ன வேலை என்பதை ஏன் மறைத்தார்? என தனியாக மனுதாக்கல் செய்யும் படியும் உத்தரவிட்டார்.

ஏற்கனவே நீதிமன்றத்தில் அதிகமான வழக்குகள் குவிந்துள்ள நிலையில் இது போன்ற தேவையற்ற வழக்குகள், மேலும் சுமை என்று குறிப்பிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மனுதாரர்கள் வழக்கு தாக்கல் செய்யும்போது மனுவில் குறிப்பிட வேண்டிய தகவல்கள் இல்லை என்றால், அதனை ஏற்கக் கூடாது என்றும், உயர்நீதிமன்ற விதிகளை பின்பற்றாத பதிவுத்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

சிறப்பு மிக்க இத்தகைய உத்தரவுகளை வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் லஞ்சம் ஊழலுக்கு எதிரானவர். 2016 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்ற போது தனது சொத்து பட்டியலை தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்து விட்டு பதவியேற்ற நேர்மையாளர்... வழக்கு ஒன்றில், கருவறை முதல் கல்லறை வரை இந்திய மக்கள் லஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் இது அனைத்து நிலைகளிலும் தொடர்வதாகவும், ஊழல் செய்யும் நீதித்துறை அதிகாரிகளையும், அரசு அதிகாரிகளையும் தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் என்ற காட்டமான உத்தரவுகளை கடந்த காலத்தில் தெரிவித்தவர் நீதிமான் எஸ்.எம்.சுப்பிரமணியம் என்பது குறிப்பிடதக்கது..! 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments