எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உட்பட 26 இடங்களில் சோதனை: 25.56 லட்ச ரூபாய் ரொக்கம், மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

0 3273

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 26 இடங்களில் சோதனை நடத்தி 26 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இவரது பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் மூலமாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து, சென்னையில் ஆர்.ஏ.புரம் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் கரூரில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் காலை முதலே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இதனை அறிந்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டுக்கு முன் அவரது ஆதரவாளர்கள் குவிந்ததால், அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே, அரசியல் காழ்புணர்ச்சியோடு முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் இல்லத்தில் ரெய்டு நடத்தப்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவடைந்த பிறகு சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள வீட்டிற்கு சென்று எம்ஆர் விஜயபாஸ்கரை முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்தித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments