ரூ.4 லட்சம் கடன் - வட்டி மட்டும் ரூ.10 லட்சம்..! கழுத்தை நெரித்த கந்து வட்டி

0 7072
ரூ.4 லட்சம் கடன் - வட்டி மட்டும் ரூ.10 லட்சம்..! கழுத்தை நெரித்த கந்து வட்டி

சென்னை கொரட்டூரில் கந்து வட்டிக் கொடுமை தாங்க முடியாமல் மளிகைக் கடைக்காரர் ஒருவர் தனது கடையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

4 லட்ச ரூபாய் கடனுக்கு வட்டியாக மட்டுமே 10 லட்ச ரூபாய் வரை கட்டிய பிறகும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த செல்வகுமாருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

ரயில் நிலையம் அருகே செல்வம் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் மளிகைக் கடை நடத்தி வந்த செல்வகுமார், கடையை அபிவிருத்தி செய்ய அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் 4 லட்ச ரூபாயும், தியாகராஜன் என்பவரிடம் 11 லட்ச ரூபாயும் கடனாக வாங்கியிருக்கிறார்.

கந்து வட்டி என்பதால் 4 லட்ச ரூபாய்க்கு வட்டி மட்டுமே 11 லட்ச ரூபாய் வரையும் 11 லட்ச ரூபாய் கடனுக்கு வட்டி மட்டுமே 33 லட்ச ரூபாய் வரையும் செல்வகுமார் திருப்பிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இருந்தாலும் ஏதேதோ கணக்கைச் சொல்லி, மேலும் மேலும் பணம் கேட்டு கடன் கொடுத்தவர்கள் செல்வகுமாரின் வீட்டுக்கும் கடைக்கும் சென்று தொல்லை செய்து வந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் இயல்பாக வந்துகொண்டிருந்த வருமானமும் நின்றுபோக, வட்டி கட்ட முடியாமல் தவித்த செல்வகுமாரிடம், கடையையும் வீட்டையும் எழுதித் தருமாறு பிரகாஷும் தியாகராஜனும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

முறையான ஆவணங்கள் இல்லாததால் காவல்துறையில் புகாரளிக்கவும் தயங்கிய செல்வகுமார் பெரும் மன உளைச்சலில் அவதிப்பட்டு வந்துள்ளார்.

செவ்வாய்கிழமை காலை கடைக்குக் கிளம்பும்போது “இன்றைக்கும் கடன் கொடுத்தவர்கள் கடைக்கு வருவார்கள், செத்துப் போவது மட்டுமே ஒரே வழி” என மனைவியிடம் புலம்பி இருக்கிறார் செல்வகுமார்.

அப்போது ஆறுதல் சொல்லி கணவனை அனுப்பி வைத்த மனைவி சரஸ்வதியை மதியம் போனில் அழைத்த வாடிக்கையாளர் ஒருவர், செல்வகுமார் கடைக்குள்ளேயே தூக்கில் சடலமாகத் தொங்குவதாகக் கூறியிருக்கிறார். இதனால், அதிர்ந்து உடைந்து போயிருக்கிறார் சரஸ்வதி.

தகவலறிந்து கொரட்டூர் ஆய்வாளர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் வந்த போலீசார், செல்வகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கு முன் செல்வகுமார் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், அதன் அடிப்படையில் தியாகராஜனையும் பிரகாஷையும் கைது செய்தனர். தற்கொலைக்குத் தூண்டுதல், கந்துவட்டி தடுப்புச் சட்டம் என இரு பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேட்கும் பணம் உடனடியாக கிடைக்கிறது என்பதற்காக யோசிக்காமல் விட்டில் பூச்சிகள் போல சென்று கந்து வட்டியில் விழக்கூடாது என எச்சரிக்கும் போலீசார், வங்கிகளிலோ, அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனங்களிலோ கடன் பெறுவதே பாதுகாப்பானது என்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments