கொரோனா பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம்: பிரதமர் மோடி

0 1883

கொரோனா பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம் என்றும், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராட வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கொரோனா பாதிப்பு, தடுப்பூசித் திட்டம் உள்ளிட்டவை குறித்து விளக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

பல நாடுகளில் கொரோனா 4வது அலை பரவிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா அதனை இரண்டாவது அலையிலேயே கட்டுப்படுத்தி இருப்பதாக பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார்.
தடுப்பூசி இயக்கம் வேகமெடுத்தது பற்றி விளக்கம் அளித்த மோடி,
முதல் பத்து கோடி தடுப்பூசிகள் போடுவதற்கு 85 நாட்கள் ஆன நிலையில், கடைசி பத்து கோடி தடுப்பூசிகள் 24 நாட்களில் போடப்பட்டதாக சுட்டிக் காட்டினார்.

தினசரி மாநில அரசுகளின் கையிருப்பாக ஒன்றரை கோடி தடுப்பூசிகள் இருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுவதாக கூறிய மோடி தடுப்பூசி இயக்கத்தை முறையாக செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக அதன் பயன்பாட்டுக்கு தடுப்பூசிகளின் இருப்புக்கு ஏற்ப திட்டமிடுமாறும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கேட்டுக் கொண்டார்.மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் இதனால் குறையும் என்றும் அவர் கூறினார்.

ஒலிம்பிக் போட்டி வீரர்-வீராங்கனைகள் உதாரணத்தை கூறிய மோடி ஒரு வீரர் பதக்கத்துடன் வரும் போது நாடே பெருமைப்படுவது போல ஒரு மாநில அரசு நோய்த்தடுப்புப் பணிகளை சிறப்பாக செய்வது நாட்டுக்கே பெருமை தரும் என மோடி தெரிவித்தார்.

பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கூறிய ஆக்கப்பூர்வமான யோசனைகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.காங்கிரஸ், ஆம்ஆத்மி, கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தவிர மற்ற கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments