"சிசிடிவி இல்லாததால் சிரமமும் இல்லை" கிராமங்களைக் குறிவைத்த "லுங்கி" திருடன்

0 3372

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பகல் நேரத்தில் சென்று பூட்டிய வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு, நிலம், வீடு, கார்கள், இருசக்கர வாகனங்கள் என வாங்கிக் குவித்த “லுங்கி” திருடன் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளான். சிசிடிவி கேமராக்கள் இருக்காது என்பதால் கிராமங்களை மட்டுமே குறிவைத்துத் திருடியதாக அவன் கொடுத்த வாக்குமூலம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலந்தல் கிராமத்தில் கடந்த 16ஆம் தேதி பட்டப்பகலில் விவசாயி ஒருவரது வீட்டில் 20 சவரன் நகை 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் மணலூர்பேட்டை சுற்றுவட்டாரத்தில் 4 இடங்களில் திருட்டுச் சம்பங்கள் குறித்த புகார்கள் வந்ததால் உஷாரான மாவட்டக் காவல்துறை, தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கியது. திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறிய 4 இடங்களுமே உள்ளடங்கிய கிராமப் பகுதிகள் என்பதால் சிசிடிவி காட்சிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் கடைசியாகத் திருடிய ஊரில் ஒரேயொரு சிசிடிவி காட்சிப் பதிவு சிக்கவே, அதில் திருடனும் சிக்கினான். 

மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு சிசிடிவி காட்சிப் பதிவுகள் விரைவாக அனுப்பப்பட,  வடகரைத்தாழனூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் என்ற நபர் வசமாகச் சிக்கினான். முதலில் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு ஒன்றும் தெரியாதவன் போல் போக்கு காட்டிய திருடன், போலீசாரின் தனித்துவமான விசாரணையில் உண்மையைக் கக்கியதாகக் கூறப்படுகிறது. 

8 ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வருவதாகக் கூறிய காமராஜ், சிசிடிவி கேமராக்கள் பெரிய அளவில் இருக்காது என்பதால் கிராமங்களை மட்டுமே குறிவைத்து, பூட்டிய வீடுகளில் திருட்டை அரங்கேற்றியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளான். கிராமப் பகுதிகளுக்கு லுங்கியுடன் சென்றால் சந்தேகப்பட மாட்டார்கள் என்பதால் திருட்டில் ஈடுபடப் போகும்போதெல்லாம் லுங்கியுடனேயே சென்றதாகக் கூறியிருக்கிறான். அதுவும் பகல் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் கேஷுவலாக சுற்றியவாறு கிராமங்களிலுள்ள சற்று வசதியான வீடுகளை நோட்டமிட்டு திருடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறான் காமராஜ். 

8 ஆண்டுகளாகத் திருடியதில் நிலம், வீடு, இரண்டு கார்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள் என வாங்கிக் குவித்து உல்லாசமாக வாழ்ந்திருக்கிறான் காமராஜ். மேலும் அவனிடமிருந்து 75 சவரன் தங்கநகைகள், 250 கிராம் வெள்ளி நகைகள், 25 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

நகரப் பகுதிக்கு மட்டுமின்றி, கிராமப் பகுதிகளுக்கும் சிசிடிவி கேமராக்கள் முக்கியம் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளதாகக் கூறும் போலீசார், ஊருக்குள் புதிதாக உலவும் நபர்கள் எவர் மீதேனும் சந்தேகம் இருந்தால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments