பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமியப் பெருமக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

0 2093
பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமியப் பெருமக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமியப் பெருமக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும்; அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்” என்ற உயரிய கோட்பாடுகள் இஸ்லாமிய மக்களின் கண்ணின் மணிகளாக என்றும் இருந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகளுக்கு, பிறகு நண்பர்களுக்கு, அடுத்துத்தான் தங்களுக்கு என்ற கொள்கையை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமியர்கள் பக்ரீத் நாளன்று ஏழை எளியோருக்கு உதவிகளை வாரி வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், துன்பப்படுவோருக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள் என்கிற நபிகளின் போதனைகளை மனத்தில் நிறுத்தி வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி வளம் பெருகும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், உலகோர் அனைவரும் ஒரே தாய் தந்தை வழிவந்தவர்கள் என்று நபிகள் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம் ஆகியவற்றைப் பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக பொதுச்செயலர் வைகோ, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோரும் பக்ரீத் பெருநாளையொட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments