சுருக்குமடி வலைக்கு தடையை நீக்கக் கோரிக்கை ; மீனவர்கள் போராட்டம்

0 1807
சுருக்குமடி வலைக்கு தடையை நீக்கக் கோரிக்கை ; மீனவர்கள் போராட்டம்

சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க விதித்துள்ள தடையை நீக்கக் கோரி மயிலாடுதுறை, கடலூர் மாவட்ட மீனவர்கள் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒப்படைத்தனர்.சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவதால் மீன் குஞ்சுகள் கூட வலையில் சிக்கி கடல்வளம் அழிவதாகக் கூறி அதற்கு அரசு தடை விதித்துள்ளது.

ஆனால் அந்த வலையை பயன்படுத்தினால் தான் அதிக மீன்கள் கிடைப்பதாக கூறி மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடியில் உண்ணாவிரதம் இருந்த மீனவர்கள் இன்று தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் வரை 5 கிலோமீட்டர் தொலைவுக்குப் பேரணியாகச் சென்றனர். அவர்கள் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருமுல்லைவாசல், பூம்புகார், மடவாமேடு ஊர்களைச் சேர்ந்த மீனவர்கள் பேரணியாக வந்தபோது சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பேரணியாகச் சென்று சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் அடையாள அட்டைகளை ஒப்படைத்தனர்.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் பத்து ஊர்களைச் சேர்ந்த மீனவர்கள் ஐந்நூற்றுக்கு மேற்பட்டோர் ராசாபேட்டை கடற்கரையில் பந்தல் அமைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேவனாம்பட்டினத்திலும் மீனவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

 மத்திய அரசின் மீன்பிடி சட்ட மசோதாவில் எல்லை தாண்டி மீன் பிடித்தால் சிறை, மீன்பிடிக்க அனுமதி கட்டணம், மீன்களுக்கு விலை நிர்ணயம் போன்ற மீனவர் நலனை பாதிக்கும் அம்சங்கள் இருப்பதாக கூறி கடலூர் துறைமுகத்தில் படகுகளில் கருப்புக் கொடி கட்டி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments