சென்னையில் கடற்கரையோரம் ஒதுங்கிய 5 ஐம்பொன் சிலைகள்

0 9500

சென்னை பெசன்ட் நகர் அருகே 5 ஐம்பொன் சிலைகள் கடற்கரையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடல் வழியாகச் சிலைகளைக் கடத்த திட்டம் வகுக்கப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை பெசன்ட் நகர் பகுதிக்கு உட்பட்ட ஓடைக்குப்பம் என்ற ஓடைமாநகர் பகுதியின் அருகில் உள்ள கடற்கரையோரமாக, அந்தப் பகுதியில் உள்ளவர்கள் நேற்று மாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது கடற்கரை ஓரமாக சில சிலைகள் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் சிலை, பீடம், அனுமன் சிலை மற்றும் 2 யானைகள் என அரை அடி உயரம் கொண்ட 5 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் அனுமர் சிலையின் மீது 1875 என்று வருடம் பொறிக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அருகில் உள்ள பழண்டி அம்மன் கோவிலின் உள்ளே வைக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரிநகர் போலீசார், சிலைகளை எடுத்துச் செல்லப் போவதாகக் கூறியபோது, பொதுமக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து, பொதுமக்கள் முன்னிலையில் விசாரணை நடத்திய பின்னரே எடுத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து வேளச்சேரி தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து நேரடியாக விசாரணை நடத்தினார்.

ஏற்கனவே தமிழகத்திலிருந்து சேர, சோழ கால சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி பல கோடி ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதும், அவற்றை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து மீட்டுக் கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரம் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால் கடல் வழியாக தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சிலைகளை கடத்தல் முயற்சி ஏதும் நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments