நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்.!

0 1570

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரில் மத்திய அரசு 29 மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறும் என்று பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இன்று தொடங்குகிறது. இரு அவைகளும் காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.

அடுத்த மாதம் 13ந் தேதி வரை நடைபெறும் 19 அலுவல் நாட்களில் மொத்தம் 29 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயிகளின் தொடர் போராட்டம், பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, தடுப்பூசிகள் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்காக நேற்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.தலைவர்கள் கட்சி பேதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் ஆக்கப்பூர்வமான விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, எந்தப் பிரச்சினை குறித்தும் நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதத்துக்குத் தயார் என்று உறுதியளித்துள்ளார்.

இதனிடையே மக்களவையின் அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்து எம்பிக்களுக்கும் நாடாளுமன்றத்தில் தங்கள் கருத்துகளை வெளியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்தார். மக்களவையில் மிகுந்த கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் எம்பிக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய மோடி, அவையில் சிறந்த முறையில் விவாதம் நடைபெற ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார். அ.தி.மு.க, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments