பிரசவ ஊசியால் உடல் அழுகி பலியான பெண்..! அரசு மருத்துவமனையின் அலட்சியம்

0 4539
பிரசவ ஊசியால் உடல் அழுகி பலியான பெண்..! அரசு மருத்துவமனையின் அலட்சியம்

தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தவறாக போடப்பட்ட ஊசி மருந்து உடலில் செப்டிக் ஆனதால், குழந்தைப்பெற்ற அந்தப்பெண் உடலில் ஒரு பகுதி அழுகி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தால் பெற்ற குழந்தையைத் தொட்டுதூக்க இயலாமல், படுத்த படுக்கையாக உயிரிழந்த தாயின் பிரிவு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

தஞ்சாவூரை சேர்ந்த கறம்பக்குடி அடுத்த கிருஷ்ணபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்... நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி சித்ராவை கடந்த 9 ந்தேதி, தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்துள்ளார்... 16ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது... பிரசவத்திற்கு பின்னர் தாயும் சேயும் நலமுடன் இருந்ததாக கூறப்படுகின்றது...

23ஆம் தேதி சித்ராவும், சேயும் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்த நிலையில் கண்ணனுக்கு ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது.. பிரசவத்திற்கான அறுவை சிகிச்சை நேரத்தில் சித்ராவின் இடுப்புக்கு கீழ் போடப்பட்ட ஊசி மருந்து செப்ட்டிக் ஆகி சிறிய அளவிலான கட்டியாக உள்ளது என்று தெரிவித்த மருத்துவர்கள், அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் அதனால் 2 நாள் கழித்து டிஸ்சார்ஜ் செய்வதாக கூறியுள்ளனர்.

உடனடியாக மருந்து கட்டியை அகற்ற சித்ராவுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இருந்தபோதிலும் சரியாகாமல், அந்தக்கட்டி இருந்த இடுப்புக்கு கீழான பகுதி பெரிய அளவில் அழுகி சிதைந்து போனதால், செய்வதறியாது தவித்த மருத்துவர்கள், உடனடியாக சித்ராவை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேற்கொண்டு ஒரு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்..

இதில், கொஞ்சம் கொஞ்சமாக சித்ராவின் சதை முழுவதுமாக கரைந்து, உடலில் உள்ள எலும்பு வெளியே தெரியும் அளவிற்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பலன் அளிக்காமல் ஜூலை 11ஆம் தேதி சித்ரா பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. பிரசவத்திற்கான அறுவை சிகிச்சையின் போது ஊசி தவறான முறையில் செலுத்தப்பட்டதால் தனது மனைவி உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டும் கண்ணன், தாயாரை இழந்த தனது பிஞ்சுக்குழந்தையுடன் தவித்து வருகின்றார்..

இந்த சம்பவம் குறித்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவிக்குமாரிடம் விளக்கம் கேட்டபோது, தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு வருவதற்கு முன்னர், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சித்ரா சிகிச்சை பெற்று குணமானவர் என்றும் தெரிவித்துள்ளார்.

தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தபோது சித்ராவுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததால் அதற்கான ஊசி இடுப்பிற்கு கீழ்புற தசையில் செலுத்தப்பட்டதையும் ஒப்புக் கொண்ட ரவிக்குமார், ஊசி செலுத்திய இடம் கருப்பாக கட்டியாக மாறியதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளார். ரத்தம் சீராக செல்லாமல் கட்டி புரையோடியதால் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும், ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இளம்பெண் சித்ரா இறந்து விட்டதாகவும் டீன் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த குழாயில் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும் என்று தெரிவித்த ரவிக்குமார், மூன்று காரணங்களால் சித்ரா உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். ஒன்று கொரோனா தொற்று பாதிப்பு, இரண்டு ஊசி மூலம் செலுத்திய மருந்து கரையாமல் இருப்பது, மூன்றாவது ஒரே நிலையில் படுத்து இருந்ததால் அழுத்தம் காரணமாகவும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

என்ன காரணத்தினால் அவர் இறந்தார் என்பதற்காக உடற்கூறு ஆய்வு செய்து தெரிந்து கொள்ளலாம் என தாங்கள் கூறியதாகவும், ஆனால்., அதற்கு மறுப்புத் தெரிவித்த கணவர் கண்ணன் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டாம் என எழுதி கையெழுத்திட்டு, மனைவியின் உடலை பெற்று சென்று விட்டதாகவும் தெரிவித்தார் ரவிக்குமார். உடற்கூறு ஆய்வு செய்திருந்தால் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறதா?, வேறு எந்தெந்த இடங்களில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது? என்பது முழுமையாகத் தெரியவந்திருக்கும் எனவும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவிக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சித்ரா இறந்த பின்னர் இத்தனை காரணங்களை விளக்கமாக சொல்லும் அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள், ஆரம்பத்திலேயே கவனத்துடன் பிரசவ சிகிச்சை மேற்கொண்டிருந்தால், பெற்ற குழந்தையை கூட தொட்டுத்தூக்க இயலாமல் சித்ரா பரிதாபமாக உயிரிழந்திருக்க மாட்டார் என்பதே கசப்பான உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments