நாடாளுமன்றம் நாளை கூடுவதை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்

0 2225

நாடாளுமன்றம் நாளை கூடுவதை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளார்.

நாடாளுமன்றக் மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 19 பணி நாட்களுக்கு கூட்டம் நடைபெறும். இதில் முக்கிய அலுவல்களையும் 19 மசோதாக்களையும், நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கூட்டத் தொடருக்கு முன்பாக இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு தரப்பில் அனைத்து கட்சி பிரதிநிதிகளிடம் ஒத்துழைப்பு கோரப்படும். மாலை 4 மணியளவில் அனைத்துக் கட்சிகளின் மக்களவைக் குழுத் தலைவர்களின் கூட்டத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூட்டியுள்ளார்.

கடந்த ஆண்டில் இருந்தே கொரோனா பாதிப்பால் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு சுருக்கமாக முடிக்கப்பட்டுள்ளன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்பிக்களை சமூக இடைவெளியுடன் அமர்த்தவும், 259 எம்பிக்களை கேலரி எனப்படும் பால்கனியில் அமர்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments