ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளை புரட்டி போட்டுள்ள கனமழை, வெள்ளம்... 130 பேர் பலி..!

0 2427

மேற்கு ஐரோப்பாவில், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளை புரட்டி போடடுள்ள கனமழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130ஐ தாண்டியுள்ளது. ஜெர்மனியில் மட்டும் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இயற்கைச் சீற்றத்தால் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெல்ஜியத்தின் லீஜ் Liege நகரில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் மியூஸ் Meuse ஆற்றில் பெரிய படகு ஒன்று மூழ்கி அடித்துச் செல்லப்பட்டது. ட்ரூஸ் நகரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் சிதைகூலங்களை போல கிடந்தன.

வெள்ளம் ஓரளவு வடிந்த பிறகு வீடுகளுக்குத் திரும்பியவர்கள், வீட்டில் உள்ள பொருட்கள் கிடந்த நிலையை பார்த்து விக்கித்து நின்றனர். தெருக்களும் சேறும் சகதியுமாக காணப்படுகின்றன. வீடுகளுக்குள் அடித்து வரப்பட்ட சேறு சகதியை அகற்றும் பணியில் குடியிருப்பு வாசிகள் ஈடுபட்டனர். பெல்ஜியத்தில் வெள்ளம் பல வீடுகளை சின்னாபின்னமாக்கி வாகனங்களை புரட்டிப் போட்டுள்ளது.

பெல்ஜியம் அரசர் ஃபிலிப்பும் (King Philippe), ராணி மதில்டே-வும் (Queen Mathilde) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, தேங்கியுள்ள நீரில் நடந்து சென்று பார்வையிட்டனர். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியபோது ஒரு இளம்பெண் கண்கலங்கினார்.

மேற்கு ஜெர்மனிக்கும் பெல்ஜியத்திற்கும் இடையே அமைந்துள்ள, தெற்கு நெதர்லாந்தின் லிம்பர்க் மாகாணம் வெள்ளத்தில் மிதக்கிறது. ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் ஆயிரக் கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பலர் வீட்டில் உள்ள பொருள்களை வெள்ளத்திற்கு பறிகொடுத்து விட்டு வெளியேறினர்.

சிலர் வீடுகளுக்குள் முழங்கால் அளவுக்கு நீர் புகுந்ததால் பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறினர்.

நெதர்லாந்தில் பல பகுதிகள் கடல்மட்டத்தைவிட கீழே இருப்பதால், கடல் மற்றும் ஆறுகளில் இருந்து நீர் புகுவதைத் தடுக்க சிமெண்ட் தடுப்புகள், மணல் மூட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கு ஜெர்மன் மாநிலங்களில் கிராமங்களும், நகரங்களும் பாகுபாடின்றி வெள்ளத்தின் கோரத் தாண்டவத்திற்கு இலக்காகியுள்ளன. வீடுகள், விவசாய நிலங்கள், மீன் பண்ணைகள் என எதையும் விட்டு வைக்கவில்லை வெள்ளம்.

மேற்கு ஜெர்மனியிலும் பெல்ஜியத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ள நிலையில், உயிரிழப்புகள் 117-ஐ கடந்துள்ளன. பொங்கிய ஆறுகள், உயிர்ப்பலி வாங்கிய நிலச்சரிவுகள் என வெள்ளத்தின் வெறியாட்டத்தை உணர்த்தும் கழுகுப் பார்வை காட்சிகளும் வெளியாகியுள்ளன.

வீடுகளை சிதைத்து, புதிதாக மேடு பள்ளங்களை உருவாக்கி விட்டுச் சென்றுள்ள வெள்ளம், வடிந்த பிறகும் வசிப்பிடங்களில் ஆபத்தாக மாறியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments