முக நூல் மெசேஞ்சர், வாட்ஸ் அப்பில் வரும் அழகிய வீடியோ ஆபத்து..! ஆபீசரா இருந்தா ஆப்புதான்..!

0 4290

சென்னையில் பிரபலங்களுடன் முகநூல் மெசஞ்சர் மூலமாக அறிமுகமாகி, வாட்ஸ் அப் நம்பரை பெற்று, அதில் ஆபாச 'வீடியோ கால்' செய்து பணம் பறிக்கும் குஜராத் அழகி ஒருவர் மீது, சென்னை பெருநகர காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் அழகில் மயங்கி, வாட்ஸ் அப் வீடியோ அழைப்பால், வலையில் சிக்கிய எலியாகத் தவிக்கும், சபலப் பிரபலங்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

பெண் ஒருவர் முகநூல் மெசேஞ்சரில் முதலில் ஹாய்... என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்துள்ளார். அந்த பெண்ணுடன் முகநூலில் சாட்டிங் செய்த வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞர், இது ஒரு ஃபேக் ஐடியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் துப்பறியும் சாம்பு போல கேள்வி எழுப்ப, அடுத்த நொடியே அந்த பெண் தனது வாட்ஸ் அப் நம்பரை கொடுத்து உங்கள் வாட்ஸ் நம்பரில் இருந்து வீடியோ கால் வந்தால் என்னை பார்கலாம் என்று தடாலடியாக கூறியுள்ளார்.

சபலத்துடனும் சற்று தயக்கத்துடனும் வினோத் வீடியோ காலில் அழைக்க அடுத்த நொடி அழகிய வட இந்திய பெண் ஒருவர் வாட்ஸ் அப் வீடியோ காலில் ஆபாசமாக அரையும் குறையுமாக வந்து நின்றுள்ளார். இதனை கண்டு விக்கித்து போன வினோத்துக்கு ஒரே குஷி..! ஆனால் அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் வினோத்துக்கு வீடுதேடி வந்துள்ளது வில்லங்கம்..!

அழகியின் வீடியோ கால் இணைப்பு துண்டிக்கப்பட்ட சில நிமிடங்களில் அரையும் குறையுமாக நின்ற அந்த பெண்ணின் ஸ்க்ரீனை வினோத் மெய்மறந்து ரசிக்கும் ஸ்க்ரீன் சாட் போட்டோ ஒன்று வினோத்தின் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பேசும் ஆண் குரல் அந்த பெண்ணின் ஆபாசத்தை ரசித்த தங்களின் சபலத்தை சமூகத்தில் அம்பலப்படுத்தட்டுமா ? என்று மிரட்டியும் சமூக வலைதலங்களில் பரப்பி விடுவோம் என்று அச்சுறுத்தியும் முதலில் 50 ஆயிரம் ரூபாய் பறித்துள்ளனர். மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டிய நிலையில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார் வினோத். விசாரணையில் அது குஜராத்தை சேர்ந்த பெண் என்பது தெரியவந்ததாக சுட்டிக்காட்டுகின்றார் வழக்கறிஞர் ஸ்ரீதர்

அரபித்தா குமாரி, அனாமிகா சர்மா என ஆளுக்கு ஒரு பெயரில் மோசடியை அர்ங்கேற்றி வரும் இந்த கும்பலிடம் சிக்கிய சவுகார்பேட்டையை சேர்ந்த ஆடிட்டர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டிய நிலையில் அவர் வழக்கறிஞர் ஸ்ரீதரிடம் உதவி கோரியுள்ளார். அந்த பெண்ணின் வாட்ஸ் அப் நபரை பெற்று ஸ்ரீதர் சாட்டிங் செய்தபோது வழக்கம் போல தனது ஆபாச சேட்டையை அவரிடமும் காட்டிமிரளவைத்துள்ளார் அந்த பெண்..!

இந்த கும்பலின் பிடியில் சிக்கியவர்களில் சிலர் வெளியே சொல்கின்றனர், பலர் பணம் போனால் போகட்டும் மானமாவது மிஞ்சியதே என்று பணத்தை கொடுத்து விட்டு தவித்து வருவதாகவும், இந்தியா முழுவதும் இந்த நூதன சைபர் கிரைம் அரங்கேறிவருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றார் வழக்கறிஞர் ஸ்ரீதர்

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்ற பிரிவில் வழக்கறிஞர் ஸ்ரீதரும் புகார் மனு அளித்துள்ளார்.

சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்களை குறிவைத்து நடக்கின்ற இந்த மோசடியில் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமானால் கூடுமானவரை வாட்ஸ் அப்பில் , பெண்களுடனான தேவையற்ற சாட்டிங் மற்றும் வீடியோகால் சந்திப்புகளை தவிர்ப்பது சாலச்சிறந்தது இல்லையென்றால் பணத்துடன் சமூகத்தில் மானத்தையும் பறிகொடுக்கும் அவல நிலை ஏற்ப்படும் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments