அடித்த அரேபியர்.. அரவணைத்து மீட்ட தமிழர் அமைப்பு..! பெண்களின் பக்ரைன் பரிதாபங்கள்

0 3792

பக்ரைன் நாட்டில் குழந்தை பராமரிப்பு வேலைக்காக அழைத்துச்செல்லப்பட்ட 3 பெண்கள் உணவின்றி அடித்து துன்புறுத்தப்பட்ட நிலையில் தமிழர் அமைப்பு ஒன்றின் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசைகாட்டி, அனுப்பி வைத்த புரோக்கரால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வள்ளி, வடிவுக்கரசி, வேளாங்கண்ணி ஆகிய 3 பெண்களையும், குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் வீட்டு வேலைக்காக கள்ளக்குறிச்சியை சேர்ந்த புரோக்கர் ஒருவர் பக்ரைன் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அரேபியர் ஒருவரது வீட்டில் தங்கி வேலைப்பார்க்க மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம், தினமும் வயிறார உணவு என்று சொல்லி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த பெண்களுக்கு ரொட்டியும் தேநீரும் மட்டும் கொடுக்கப்பட்டதாகவும், சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டதாகவும் கூறபடுகின்றது.

புரோக்கர் தங்களிடம் கூறியது போல 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்டதற்கு அந்த 3 பெண்களில் ஒருவரான வள்ளியை அந்த வீட்டில் உள்ள அரேபியர் துன்புறுத்தியதாகவும், ஆளுக்கு 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து விட்டு ஊருக்கு செல்லும்படி மிரட்டியதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 6 மாதங்களாகத் தவித்து வந்த 3 பெண்களில் வள்ளி என்பவர், தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து வாட்ஸ் அப் மூலம் இங்குள்ள உறவினர்களுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி உதவி கோரினார். இங்குள்ள உறவினர்கள் வண்ணாரப்பேட்டை துணை ஆணையரிடம் இதுதொடர்பாக புகார் அளித்தனர்.

இதனை யூடியூப்பில் பார்த்த பக்ரைனில் வசிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தில் என்பவர் தனது அன்னை தமிழ் மன்றம் என்ற தமிழர் நலனுக்கான அமைப்பின் மூலம் தூதரகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். உடனடியாக காவல் துறையினர் மூலம் அந்த அரேபியர் வீட்டில் பணிப்பெண்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த வள்ளி, வடிவுக்கரசி, வேளாங்கண்ணி ஆகிய 3 பேரும் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான டிக்கெட் மற்றும் பயண செலவுக்கான உதவிகளை செய்து செந்தில் குழுவினர் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னைக்கு வந்து சேர்ந்த 3 பேரும் தங்களுக்கு உதவிய செந்தில் மற்றும் சென்னையை சேர்ந்த கன்னிகா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வோர் நம்பிக்கையான ஏஜெண்டுகள் மூலம் செல்வதே பாதுகாப்பானது என்றும், பணத்தாசை பிடித்த புரோக்கரிடம் சிக்கினால் அரேபியரிடம் குறிப்பிட்ட லட்சங்களை பெற்றுக் கொள்வதோடு, வேலைக்கு செல்வோரிடமும் பணத்தை கறந்துவிட்டு வீட்டு வேலைக்கான அடிமையாக விற்றுவிடுவார்கள் என எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments